காலம் எதற்கெல்லாம் காத்திருக்கும் என யாருக்குமே தெரியாது, ஆனால் நன்றாக வாழ்ந்துவரும் நாட்களில், நாமேதான் நாட்களை நகர்த்திக்கொண்டு போவதாக நினைத்து ஜம்பமாக பேசிக்கொள்கிறோம். கடினமான சமயங்களை  எதிர் கொள்ளும் டயத்தில், இப்படியாகும் என நான் கனவில்கூட நினைக்கவில்லையென ஒத்துக்கொள்கிறோம்,  அதையும் ஓரிரு நாட்களில் மறந்து பழையபடி செயல்பட ஆரம்பித்துவிடுவோம்.  மனித மனதிற்கு அசாத்ய சக்தியுள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டி வருகிறது. நமக்கு பிரியமானவர்கள்   தவறி விட்டாலும் பசி, தாகம், தூக்கம் அந்தந்த டயத்திற்கு, டாண், டாண் என்று பசி வயிற்றை குடைகிறது, தூக்கம் கண்ணை சுற்றுகிறது, தூக்கம் துக்கத்தை மறக்கவைக்கிறது. காலை காபி, மாலை டீ குடிக்கும் சமயம் போய் விட்டால் தலைவலி வந்துவிடுகிறது.

நமக்கே தெரியாது நமக்கு என்ன நடக்குமென்பது ! ஆபீஸ் சென்ற கணவர் வீட்டிற்கு  திரும்பி வருவார் என்பது நிச்சயமில்லை. அவர் வரும்போது வீட்டிலிருப்பவர் உயிருடன் இருப்பார் என்பதும் நிச்சயமில்லை.   இரவு படுத்தால் காலையில் எழுந்திருக்காமல் எத்தனையோ பேர் போய்விடுகிறார்கள். பெரிய குடும்பமாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் வித,விதமான சாவு செய்திகள் கிடைத்து மனதை பிழிகிறது.

பழைய நாட்களில் வீடுகளில் நல்லவைகளையே பேசவேண்டும், வீட்டில் கண்ணுக்குத்தெரியாத தேவதைகள் இருப்பார்கள், சதா சர்வ காலமும் அப்படியே நடக்கட்டும் என கூறி ஆசிகளை கூறுவார்கள் என பெரியோர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். இன்றைக்கு நினைத்துப்பார்த்தால், உண்மையாகவே இருக்குமோ என்கிற மாதிரி தோன்றுகிறது.  இது  எதை நினைத்தால் இந்த பித்தம் தெளியும் என்ற எண்ணம் வருகிறது.

எந்தமாதிரியான காலத்தையும் வெல்ல யாராலுமே முடியாது. ஆனாலும் நல்லமனிதர்களாக இருந்தாலும்,  காலத்தால் அவர்களையும் ஆட்டி வைத்து வேடிக்கை காண்பிக்கிறான் ஆண்டவன், இது நியாயமா என கேட்கவேண்டும்போல் மனம் துடிக்கிறது. யாரைக்கேட்பது என்று புரியவில்லை. காலத்தை வெல்ல யாரால் முடியும்?  எது எப்படி நடந்தாலும் மனிதர்களாக பிறந்துள்ள யாவருமே, நாம் நமக்காக மட்டுமே வாழ்கிறோம் என்பதே உண்மையாகும். எது வந்தாலும் சரி, யார் போனாலும்சரி, எவர் வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும்சரி ,சராசரி மனிதர்கள் ஸ்பிரிங் பொருத்திய பொம்மை மாதிரி கிளம்பி எழுந்து எப்படியோ உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து வாழ்ந்தே வருகிறோம்.கொஞ்ச காலம் துக்கத்தில் மூழ்கியிருந்தாலும்  உயிரிழப்பு என்பதை எதை பணயம் வைத்தும் மறக்கவே முடியாதுதான். மனதை எத்தனை அழுத்தி வைத்தாலும் துள்ளி எழுந்து வந்து விடுகிறது.