ஒரு முறை நான் கடைத்தெருவிற்கு போய் சாமான்கள் வாங்கிக்கொண்டு பஸ்ஸில் திரும்பும் சமயம் என் பர்ஸை யாரோ எடுத்துவிட்டார்கள்.வீட்டில் வந்து சேர்ந்து சாமான்களை எடுத்துப்பார்க்கும் சமயம் எனக்கு தெரிந்தது, என் பர்ஸ் திருட்டுப்போய்விட்டதென. எங்கு விட்டிருப்பேன் என எனக்கு தோன்றவேயில்லை. பர்ஸில் அதிக பணமில்லை ஆனாலும் நம்முடையது என்றிருப்பது நம்மையறியாமல் எடுத்து விட்டார்கள் என நினைக்கும் போது ஆத்திரமாக வந்தது. வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டு, அந்த பர்ஸில் என்னவெல்லாம் வைத்திருந்தேன் என நினைவு செய்து யோசிக்கும்போது , நிறைய கோயில்களின் பிரசாதங்களாக குங்குமம் ,விபூதி பொட்டலங்களுடன் மற்ற கோயில்களில் கிடைத்த துளசி, வில்வ இலைகளுமே இருந்தன. பிரசாதத்தை இழந்து விட்டோமே என மனவருத்தம் அதிகமாக இருந்தது. என்னுடைய அட்ரஸுடன் கூடிய கார்டு, போன் நம்பருடன் இருந்தது . ஒரு நான்கு நாட்கள் ஆனபின்பு போன் வரும், என் கணவர் லீவில் இருந்ததால் , இவர் ஹலோ என்றவுடன், மறு பக்கத்திலிருந்து யாரும் பேசாமல் வைத்து விடுவார்கள். காலை வேளைகளில் நம் வீட்டு ஆண்களே பேசுவார்கள். ஒருநாள் இரவு ஒன்பது மணிக்கு போன் வந்தது . நான் எடுத்தவுடன் உங்கள் பர்ஸ் தொலைந்த இடம் எங்கே என மறுபக்கத்திலிருந்து கேள்வி வந்ததும், நான் எதிர்பார்க்காத படியால் எனக்கு நாக்கு வறண்டு போய்விட்டது . எனக்கு பேச்சே வரவில்லை. மறு பக்கத்திலிருந்து கவலைபடும்படியாகவோ , பயப்படுகிற மாதிரி எதுவுமேயில்லை. கேட்டதற்கு பதில்தேவை என்றதும் உளறிக்கொண்டே பர்ஸ் தொலைந்த இடத்தை கூறியவுடன், உங்கள் வீட்டு பூத்தொட்டியின் அருகில் ஒரு தினசரி பேப்பரில் மடித்து வைத்துள்ளேன். எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் பர்ஸில் இருந்த மந்திரவாதிகளின் பூ,இலைகளுடன் இருந்தவைகள் என்னை நடுங்க வைத்து விட்டது. உண்மையிலேயே எனக்கு பணம் தேவையானதால் மட்டுமே நான் இந்த ஈன செயலை செய்துவிட்டேன் , உங்கள் பர்ஸ் என்வீட்டில் இருந்த நாட்களில் என் நிம்மதி பறிபோய்விட்டது. என்னை எந்த சாபத்திற்கும் ஆளாக்காதீர்கள் தாயே, எனக்கூறி போனை வைத்து விட்டார், ஒரு ஆண்சிங்கம். திருடினாலும் மனசாட்சிக்கு விரோதமான நடத்தையினால் மனிதர்களுக்கு பயம் ஏற்படுகிறது என்னவோ உண்மைதான், என்பதை நினைத்து வியந்தேன்.
Leave A Comment