பணக்கார குடும்பமோ, ஏழைகுடும்பமோ மனது மாறி,மாறியேதான் இருந்து வருகிறது. ஆறு பிள்ளைகளில் கடைக்குட்டியான பாக்கியம், அம்மா காலம் முடிந்தவுடன் அப்பாவுடனேயே இருப்பேன் என அடம் பிடித்தபடியால் அப்பாவுடன் இருந்து கொண்டிருந்தாள். கல்யாணமே வேண்டாமென கூறி மறுத்தும், தகராறுகள் செய்வாள். மூன்று உடன்பிறந்த அண்ணன் தம்பிகளுக்கு இந்த பிளான் நிம்மதியை கொடுத்தாலும், மனதில் ஒரு மூலையில் காரணம் என்னவாக இருக்கும் எனகண்டுபிடிக்கமுடியவில்லையே என ஏமாற்றமும் இருந்தது. மனைவிமார்களுடன் மல்லுக்கு நிற்கும் சமயத்தில் ஒரு சப்போர்ட் இருக்குமென்று தோன்றியது போலும். அம்மா தலை சாய்ந்தவுடனேயே அப்பா, அம்மாவின் நகைகளையும், இதர சாமான்களையும் ஆறுபங்காக போட்டு, யாவருக்கும் கொடுத்து முடித்தவுடன் அவரவருக்கு பெரிய நிம்மதியாகி விட்டது. இந்த மாதிரி வம்பு சண்டைகளே இல்லாமல் போனாலும் சந்தேகமும் வந்தும் விடுகிறது. மனித மனதிற்கு எதைக்கொடுத்தும் திருப்தியளிக்க முடியாது. மனித வாய் என்னவோ பேசும் , மனது வேறு எதையோநினைக்கும் என்பது உண்மையே. அதற்கு மேல் அப்பா தலை சாய்ந்த பின், பாக்கியம் யாரிடம் இருக்கப்போகிறாள் , என்ற கவலையும் பிடித்துக்கொண்டு ஆட்டிப்படைத்தது. அதைப்பற்றி பேசி, பேசி நான்கு அண்ணன் தம்பி வீடுகளில், இந்த கனம் யார் தலையில் விழ இருக்கிறது என சர்ச்சைகள் நடந்தது.
பல குடும்பங்களில், தன் கூடபிறப்பையே பாரமாக கருதி , solution எடுப்பதற்கு பதிலாக , எரியும் நெருப்பில் நெய்யை வார்த்து திகு, திகுவென்று பற்றி எரியும்போது, எனக்கு அப்பவே தெரியும் இப்படியாகுமென்று என ஜோஸ்யம் தெரிந்தாற்போல் வேறு கூறி முற்றுப்புள்ளி வைப்பார்கள். அதே ஜோஸ்யனுக்கு எதையும் சமாளிக்கவும் தெரியாமலிருக்கும், ஆனால் எந்த பிரச்னை வந்தாலும், எனக்கு வருடங்கள் முன்பே தெரியும் எனக்கூறி மற்றவர்களை முட்டாள்கள் போல காண்பித்துக்கொண்டு வாழ்ந்து வருவார்கள் . அது வரை தன் சகோதரர்கள் போல் எவருமே இருக்கமுடியாது இறுமாப்புடன் இருந்த பாக்கியத்திற்கு தன்னை ஒருஏலம் போடும் பொருளாக, தன் கூடப்பிறந்தவர்கள் பேசி முடிவுக்கு வரமுடியாமல் தவிப்பதை பார்த்து சிரிப்புதான் வந்தது. தன்னை கன்ஸல்ட் செய்யாமலேயே அவர்களாகவே முடிவெடுப்பதை கேட்டபின் மனம் உடைந்து உட்கார்ந்து விட்டாள். ஒரு காலத்தில் அக்கா, என்று குழைந்து பேசிக்கொண்டிருந்த தம்பியும் தன்னை எதுவுமே கேட்கவில்லையே என தாபமேற்பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரே சகோதரியான அவள் எதற்குமே கூட பிறந்தவர்களிடம், இன்று வரை எதற்காகவும் கைநீட்டியது கிடையாது. டியூஷன் சொல்லிக்கொடுத்து வரும் பணத்தில் , மற்றும் அவளுடைய பங்கிற்கு ,அவள் கல்யாணத்திற்கென்று தகப்பனார் வைத்திருக்கும் பணத்திலிருந்து கிடைக்கும் பாங்கு வட்டியிலிருந்து அண்ணன் பிள்ளைகளுக்கும், அவர்களுக்கும், அவர்கள் மனைவிமார்களுக்கும் எதையாவது வாங்கி தந்து கொண்டேயிருப்பாள். ஆனாலும் வீட்டிலிருப்பவைகளில் அவளுக்கு தன்னுடையது எனகூறிக்கொள்ள எதுவுமில்லையென்றாலும் மகிழ்ச்சியுடனேயே காலம் தள்ளிக்கொண்டிருந்தாள்.
ஒருநாள் மாலை ஜகதீசன் என்பவர் அவளிடம், தன் பதினான்கு வயது பிள்ளையை டியூஷன் சொல்லிக்கொடுக்க முடியுமா என கேட்பதற்காக அழைத்து வந்திருந்து, டயம், ட்யூஷன்பீஸ் கேட்டுப்பேசிப்போனதிலிருந்து அவள் மனம் அலை பாய ஆரம்பித்து விட்டது என்னவோ உண்மைதான். அவர் பேசிய தோரணை, அவளுக்கு மிகவும் பிடித்ததா இல்லை, அவரை சந்தித்தது மட்டும் பிடித்து விட்டதா என்பதும் அவளுக்கும் புரியவில்லை. தினம் சாயங்காலம் சம்பத்தை அழைத்துப்போக ஜகதீசன் வரும் நேரத்தை எதிர்பார்த்துக்காத்திருப்பாள். ஒருமாதமாகி பணம் கொடுக்கும், அதாவது டியூஷன் பீஸ் கொடுக்கும்சமயமும் வந்தது. அங்குமிங்குமாக பார்த்துக்கொண்டு டியூஷன் பணம் வாங்கிகொள்ளும் சமயம் நீங்கள் தனியாகவா இருக்கிறீர்கள் எனக்கேட்டதும் , ஆமாம், தற்போது தன்னந்தனியேதான் என ஒரு புன்முறுவலுடன் பாக்கியம் பதில் கூறியது ஜகதீசனுக்கு மிகவும் பிடித்து விட்டது. எனக்கும் அதே கதைதான் என பளீரென்று மின்னல் அடித்தாற் போல் ஒரு பிரமை ஏற்பட்டது. பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் மிகவும் நன்றாகவேயிருந்தது. தன்னுடைய சகோதரர்களிடம் எப்படி கூறப்போகிறேனோ என சங்கோஜம் இருப்பதையும் உணர்ந்தாள்.
சகோதரர்களிடம் தானே முடிவு செய்து கொண்டு கூறலாம், என நினைத்திருந்தாள். அதற்கு முன் ஜகதீசனின் எண்ணத்தை எப்படி தெரிந்து கொள்வது, என புரியாது தவித்துப்போனாள். இப்படியே இரண்டு ,மூன்று மாதங்கள் கடந்தன. எப்படியோ கடத்தினாள் என்பதுதான் உண்மை. அதே உணர்வுதான் ஜகதீசனுக்கும் இருந்திருக்க வேண்டும். நாட்கள் ஆக,ஆக அவர் பேசும் ஸ்டைல் மாறி விட்டதை உணர்ந்து கொண்டதும் பாக்கியம், நாம் சேர்ந்து வாழ்ந்தால் சரியாக இருக்குமென்றால் நான் ரெடி என்றதும், தாங்ஸ், தாங்கஸ் என தட்டுத்தடுமாறி கூறியதும் , குப்பென்று வியர்த்துக்கொட்டி மூச்சுத்திணறுவதை கண்டதும், ஜகதீசனைஅதே நேரத்தில் தாங்கி , கீழே விழாது பிடிக்கும் சமயத்தில்அவள் கைகளினால் தாங்கிக்கொள்ளும்போது, அவர் உயிர் பிரிந்தும் விட்டதையும் உணர்ந்தாள். ஆண்டவனின் முடிவை நமக்கு புரிந்துகொள்ள முடியாது என்பதை எதுவும் நடந்து முடிந்தவுடன்தான் உண்மையென்று உணர்கிறோம்.
Leave A Comment