வாழ்க்கையில் பெரியவர்களாக இருந்தாலும் , சிறியவர்களாக இருந்தாலும் அவரவர்கள் தங்கள் எல்லையை தாண்டாமலிருந்தால் நன்றாகவேயிருக்கும். ஒரு சிலருக்கு தங்கள் விவேகத்தை காட்டிக்கொள்வது போல் பேச்சு மட்டும் இருக்கும். ஆனால் எதற்குமே உதவாதபேச்சு, வேலைகள், யாருக்கு ஒத்து வரும்? மக்களுக்கு வேறு எதற்கெல்லாமோ மூளை படு வேகமாக உத்வேகத்துடன் வேலை செய்கிறது. ஆனால், தனக்கென வரும் கடினமான சமயத்தை கையாள தனியாக மூளை வேலை செய்வதில்லை. சமரசம் செய்து கொண்டுதான் வாழவேண்டும், என்பதும் தெரிவதில்லை. உலகில் எத்தனையோ முன்னேற்றங்கள் வந்து விட்டாலும் சில ஸிஸ்டங்கள் பழைய மாதிரியே இருப்பதில்தான் ஒரு அழகும் உள்ளது. குடும்பத்தில் அம்மா என்னும் உருவம்தான் பிள்ளைகளுக்கு ஆணிவேர் மாதிரி. அந்த ஆணிவேரில் ஆட்டம் காண விடக்கூடாது. பெற்றோர்களின் அதிகப்படியான விவாதங்கள் குடும்பத்தில் ஆபத்தையும் அளித்து விடுகின்றன. கல்கட்டிடங்களுக்கு சரியான அஸ்திவாரம் போடாவிட்டால், எப்படி சில வருடங்களில் இடிந்து, சரிந்து பாழாகி விடுமோ, அதே கதிதான் நம் குடும்பங்களுக்கும் ஆகும், என்பதை நினைத்துப்பாருங்கள்.
பிள்ளைகள் வாழ வழி தெரியாத காட்டில் (வீட்டில்) ‘எடுப்பார் கைப்பிள்ளைகளாகி’ விடுவார்கள். பிள்ளைகள் மனதில் நல்லவைகளை கற்க நாட்கள் , மாதங்கள் ஏன், வருடங்கள் கூட எடுக்கும். எச்சில் நீரில் ஊறிக்கொண்டிருக்கும் நாக்கிற்கு நாம் கொடுக்கும் சுதந்திரம் நமக்கே, நம் கேள்விகளால், அபாயத்தை காண்பித்து , நம் வாழ்வையும் அழித்தும் விடும். பேச்சுக்கு பேச்சு எதிர்பேச்சு பேசிவிட்டால் பிரபலமாகி விடமாட்டோம் என்பதை மனதில் வைத்திருப்பது அவசியமே. அதுவும் வீட்டில் பிள்ளைகுட்டிகளை, இந்த உலகிற்கு கொண்டு வந்துள்ள பெற்றோர்கள் தங்கள் பேச்சின் போக்கை கவனித்தே வாழவேண்டும். நம்மையேதான் புத்திர சந்தானங்கள் கவனமாக கவனித்தும், வளர்ந்தும் வருகிறார்கள். பெற்றோர்களின் ஸ்டைல் மாறாமல், அவர்கள் டயம் வரும்போது பெற்றோரிடமே பேச ஆரம்பித்து விடுவார்கள். ஏனெனில், அவர்கள் பார்த்தும், கேட்டும் வளர்ந்த வாழ்க்கை அதுதான்.பிள்ளைகள் நான்கு ஐந்து வயது வரை தங்கள் உலகில், விளையாட்டு சாமான்கள், தின்பண்டங்கள் இவைகளுக்கு மட்டுமே ஆசைபடுவார்கள். பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தவுடன், புதிய உலகில் கால் எடுத்து வைத்தவுடன், பிறரை தன்னுடன், தன்னை பிறருடன் ஒப்பிட்டுப்பார்த்து வளர்கிறார்கள்.
ஏழையோ, பணக்காரனோ அன்பிற்கு அளவுகோல் கிடையாது. அந்த அன்பின் நம்பிக்கையில் வளர்ந்த பிள்ளைகளுக்கும், பெற்றோரின் சூறாவளி வாழ்க்கையை பார்த்து, அனுபவித்த வாழ்க்கைக்கும், புதிய உலகத்தையும் ஒப்பிடுகையில் மலைக்கும், மடுவிற்கும் உள்ள வித்யாசத்தை உணர்வார்கள்.. நம்க்கு கடினமான சமயங்கள் வரும்போது கண்ணால் காணமுடியாத ஆண்டவன் இருக்கிறான் அவன்விட்டவழி என்கிறோமே. அதேபோல பெற்றுப்போட்டவர்களின் அன்பு கிடைக்காவிடில் அந்த பிள்ளைகள் மனதிலும் சோகம் குடி கொள்ளும். பிற மனிதர்கள் அவர்களை கெட்டவழியில் நடத்தி செல்வதற்கும் சுலபமாகிவிடும். அதற்கு வழி காட்டியவர்கள் பெற்றோர்கள்தான் என்பதை மறவாதீர்கள். நல்வாழ்க்கையில் வளர்ந்த பிள்ளைகளுக்கும், யுத்தகளத்தில் வளர்ந்த பிள்ளைகளுக்கும் வித்யாசம் உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும். மிருகங்களுக்கு தாய்ப்பால் குடிப்பது நின்றவுடன் அவைகளுக்கு பெற்றோர்களை நினைவு இருக்காது. மனித ஜென்மங்கள் அப்படியில்லை. ஆயுள் உள்ள மட்டும் தாய்,தந்தை என்பவர்கள் பிள்ளைகளின் நினைவில் வளைய வருவார்கள். பெற்ற பிள்ளைகளுக்கு பொறுப்பை உணர்த்தி வளர்த்து விட முடியாது. உயர்வான வாழ்க்கையை வாழ்ந்து காட்டவேண்டும். தானாக பழுக்காதவற்றை தடியால் அடித்து பழுக்க வைக்க முடியாது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சுகத்தையே கருதி செயல்படுகிறார்கள், என்பதெல்லாம் அறியாதபிள்ளைகளுக்கு புரியாது. எதற்கும் பேச்சுக்களால் அடித்துக்கொண்டும், வார்த்தையாடிக்கொண்டும் வாழ்ந்தால், நல்லது ,கெட்டது புரியாத வயதில், பிள்ளைகள் மனதில் இந்த வேண்டாத பேச்சுக்கள் நன்றாக படிந்துவிடும். வயது காலத்தில்,மதிப்புக்குரிய பெற்றோர்கள் மண்ணைக்கவ்வி விடுவார்கள். பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் மகத்துவம் புரிய ஆரம்பிக்கும் சமயத்தில், தகராறு பேச்சுக்களே தலை தூக்கி பேச வைக்கும். ஏனென்றால் அந்த பாவிப்பிள்ளைகள் கேட்டவைகள் அவைகள்தான். நல்லது எது, கெட்டது எது , என புரியாது முழித்துக்கொண்டு திண்டாடி வாழும் சமயத்தில்,தன்னை பற்றி மதிப்பிடுவது கடினமே. நீங்களே, உங்கள் நன்நடத்தைகளை பற்றி விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. காலம் கூற ஆரம்பிப்பதற்கு முன் தாங்களாகவே, மதிப்பு போட்டு பாருங்கள். முன்னோடிகளாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பிள்ளைகளை உதவாக்கரைகளாக்கி விடாதீர்கள். அவர்கள் மனதில், பெற்றவர்கள் தங்கள் தகராறுகளில் நம்மை தத்தளிக்க செய்து விடுவார்கள் என்ற அவநம்பிக்கையை அண்ட விடாதீர்கள். நம்மால்தான் பிள்ளைகள் அவதரித்துள்ளார்கள், என்பதையும் மறவாதீர்கள் ….
Leave A Comment