அவரவருக்கு தனக்கென்று அமைந்திருக்கும் வாழ்க்கை சிலருக்கு பிடிப்பதேயில்லை. பிறர் வாழ்க்கையை பார்த்து பொருமுவதேதான் பழக்கமாகவும் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எது கிடைத்த போதிலும், திருப்தி என்பதேயிருக்கிறதில்லை. ஆகையால் எவராவது எதையாவது தவறாக கூறிவிட்டாலும் , உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டு , விடாக்கண்டன் மாதிரி பேசுகிறார்கள். உலகில் பிறந்துள்ளமனிதர்கள் ஒவ்வொருவரும், வித,விதமான சுபாவத்துடனேயே பிறந்துள்ளார்கள். இந்தகாலம் புராண காலத்தை விட வேறுபட்டுக்கொண்டு வருகிறது என்பது உண்மையே. சொல்லிக்கொடுத்து , காதால் கேட்டு எத்தனை பழக்கவழக்கங்கள் வரும்? பழக்கம் மாறாமல் இருக்குமா? கியாரண்டி யார்கொடுப்பார்கள், இப்படி பல சமாசாரங்கள் பேசியும், தவிர்க்க முடியாமல் தவிக்கும் ஜனங்கள் எங்கும் காணப்படுகிறார்கள். பழைய காலங்களில் தலை விதியை நொந்து கொண்டு காலத்தை ஓட்டமுடியாவிட்டாலும், ஓட்டினால் நம்மால் பலருக்கு முன்பு தலை குனியும் அவசியமிருக்காது என நினைத்தும் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் அப்படி செய்ததினால் குடும்பங்கள் உடையாது, பிடித்தோ, பிடிக்காமலோ, காலத்தை ஓட்டியிருக்கிறார்கள். இன்றைய நிலைமையே வேறு. சங்கோஜம் குறைவாகவே காணப்படுகிறது. ஆணுக்கு சமமாக பெண்ணும் படிப்பில் தேறியும், சம்பாதிப்பதிலும் நிகராக இருந்தாலும், ஒரு துளி ஏறத்தாழ இருந்தால் பிடிக்காமல் போய்விடுகிறது. ஆண்களை விட பெண்மணிகளுக்கு பொறுமை சுபாவம் அதிகமாக காணப்பட்ட காலம் கலைந்து ,மறைந்தும் வருகிறது. இருவரும் ஏறக்குறைய ஒரேமாதிரி சம்பாதிப்பதாலும் மனதில் மமதை ஏறிவிடுகிறது. ஆணை விட, பெண் எதில் குறைந்து விட்டேன் என்ற எண்ணம்தான் காரணம். இன்றைய ஆண்களும் பெண்ணுக்கு நிகராக வீட்டு வேலைகளை செய்து முடித்து, தங்கள் அலுவலகத்திற்கு போய் வருகிறார்கள். ஒருவிதத்தில் இதுவும் வரவேற்க வேண்டிய விஷயமே. எல்லாவற்றிலுமே இருசாராருக்குமே போட்டி என்பதில்லாது, நம்வீடு, நம்பிள்ளைகள், நம் குடும்பம் என்றும் ஒற்றுமையாகவும் மனதாரவும் , ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையாக வாழ்வதை பார்த்தால் மனதிற்கும் நன்றாகவே உள்ளது. ஆண் ஆதிக்கத்திலேயே ஊறிய உள்ளங்களுக்கு அந்தகால பெரியவர்களும் ஆண்களை உயர்த்தியே பேசுவார்கள். அதற்கு தகுந்தாற்போல் பெரியவர்களும் பழமொழிகளை கூறி கிளப்பிவிடுவார்கள். ” அதிர்ந்து வராத ஆணும், முதிர்ந்து வராத சோறும் நன்றாக இராது ” சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை, ஆண்பிள்ளையேதான்” என்று இப்படியாக எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பது போல் பேசி ஆண்களுக்கு போட்டும் கொடுப்பார்கள். அவரவர்களை தாங்களாகவே ஒருவருக்கொருவர் இணைந்து வாழ விட்டோமானால் எல்லாமே எந்தக்காலத்திலும் சரியாகவேயிருக்கும்.ஆணில்லாமல், பெண்ணில்லை,பெண்ணில்லாத வீடு காடுதான், ஆணில்லாத வீடு கூரையில்லாத வீடுதான், என்பதே சரியான வார்த்தைகள்.
Leave A Comment