பெண்களின் மனம் எத்தனை சீக்கிரம் கலங்குமோ அத்தனைக்கத்தனை பாறாங்கல் போல் நீரைக்கூட உறியவேண்டாமென்ற சக்தி படைத்தது. சோதனைகள் வரும்போது, எதிர்த்து நின்று போராடும் சுபாவத்தை அடைந்த மனம் எதற்குமே கலங்காதது.மேலும் தன் கடமையை தான் போராடியே சாதித்து ஆகவேண்டுமென்றால் செய்தும்காட்டும். ஆனால் தன் கணவனை இழந்த பெண்ணுக்கு கிடைக்கும் பரிவோ, பச்சாதாபமோ தன்கணவனை விட்டு விலகி வாழும் பெண்களுக்கு கிடைக்காது. ஏனெனில் பிற மனிதர்களுக்கு இந்த பெண்மணி ஏன் கணவனை பிரிந்து வந்தாள் என முழுவிபரம் தெரியாது.தெரிந்தாலும் தங்கள் வாழ்க்கையில் கணவனை விட்டு வந்தவள் நம் வாழ்க்கையில் குறுக்கிட்டு விடாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையிலேயும் மூழ்கி விடுவார்கள். ஊரில் திருட்டு பயம் அதிகரித்தால் வீட்டின் பந்தோபஸ்த்தை நாம் அதிகப்படுத்துவதைப்போல்தான் இந்த தனி பெண்ணின் நிலையும்.தன்னை தொட்டு தாலிகட்டியவனை விட்டு,விட்டு ஒரு பெண் விலகியிருக்க வேண்டிவந்தால்,உதவிக்கு பத்துபேருக்கு, பதிலாக இருபது ஆண்கள் ஓடி வருவார்கள்.நப்பாசைதான் காரணம் என்பது ஆட்கள் பெண்ணிடம் நடந்து கொள்ளும் வித்த்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். கணவன் என்பது பெண்மணிகளை சுற்றி முள்வேலிகட்டியிருப்பதை போல. மேலும் அவளை சுற்றி ஒரு கரண்டுடன் எலக்ட்ரிகல் கம்பி உள்ளது போலவும் இருக்கும்.அதற்கும் மேலாக ஆண்,பெண் கவர்ச்சியென்பதும் உண்டு. அக்கரைக்கு இக்கரை பச்சையே தவிர கலகங்கள் இல்லாத குடும்பங்களே கிடையாது எனவும் கூறலாம்.ஆனால் உண்மையிலேயே சில குடும்பங்களில் பயிரை மேயப்பார்ப்பது என்ற பழமொழிக்கேற்றாற்போல் தன் சொந்தபந்தங்களே அவர்களை அண்டி வந்தவர்களை கெடுக்கப்பார்க்கிறார்கள்.
எவருக்குமே உண்மை தெரியாமல்,பிறர் வாழ்க்கையைப்பற்றி அவரவர் மனதில் தோன்றியவைகளை பேசிக்கொண்டிருப்பார்கள், மேலும் வேறெதுவும் பேச்சுக்கள் இல்லாத நேரத்தில் இது ஒரு வரப்பிரசாதம் போல் அமைந்துவிடுகிறதும் கூட.வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்து விட்டது போல் பொழுதை தள்ளுவதற்கும் பேசுவார்கள். பிறமனிதர்கள் பேசுவதால் எவருக்கும் எந்தகுறைவும் வந்துவிடாது. ஆனால் அடிபட்டவர்களுக்குத்தான் அவரவர் மனக்கஷ்டங்கள் புரியும் என்பதே உண்மை. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். உண்மையை அறிந்தால்தானே பச்சாதாபம் ஏற்பட சான்ஸ் கிடைக்கும். மேலும் குற்றம் என்பதை எப்போதுமே பெண்மணிகள் மீதே போட்டு பழகிவிட்ட நாகரீகமான நம் மெத்த படிப்புபடித்த மக்கள்,ஆண்களிடம் குற்றம் காண்பதில்லை என்பதும் நம் தேசத்தின் பெரிய குறைபாடுதான். குற்றத்திற்கேற்ற தண்டனை என நிர்ணயித்திருந்தாலும் அவரவர்மனதில் உண்மையான ஆதரவு காட்டும் தன்மையில்லாமல் வாழ்வது இந்த தேசத்தின் பெருங்குறைதான்.