பணம் என்பது யாவருக்குமே அவசியமான ஒன்று என்பது நம் யாவருக்குமே தெரிந்த உண்மைதான்.ஆனால் வாழ்க்கையில் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நம்மை கவனிக்க எவருமேயில்லாது போய்விட்டால், பணத்தின் மதிப்பே வேறுபட்டு விடுகிறது.. பணம் என்றால் செத்த பிணம் கூட வாயை பிளக்கும் என்றதொரு பழமொழி உள்ளது.. ஆனால் அல்பமான மனதிற்கு எதைக்கொடுத்தும் திருப்தியடைவதில்லை. பணம் தன்னந்தனியாக எதையுமே கவனிக்காது. அதை ஆட்டி, கூட்டி உபயோகத்தில் கொண்டு வரவேண்டும்.
அனாதைபிணத்திற்கு கோவிந்தாகொள்ளி போடுவார்கள் எனகேட்டிருக்கிறேன். சொந்த பந்தங்களில்லாத மனிதர்களுக்கு கடைசிகாலத்தில் அவர்களுடன் இருக்க எவருமில்லாவிடில், ஊரில்உள்ள பெரியமனிதர்கள் கூட்டம் போட்டு பேசி அனாதை பிணத்தை சுடுகாட்டில் கொண்டுவைத்து நான்கு நல்லவர்கள் சேர்ந்தாற்போல் நெருப்பு வைத்து கோவிந்தா, கோவிந்தா எனக்கூவி பிணத்தை எரித்துவிடுவார்கள். மறுநாள் காலை எரிந்த பிணத்தின் சாம்பலை நீரில் கரைத்தும் விடுவார்கள். அதன்பின் பெரியவர்கள்,மோக்ஷத்தில் சேர்க்கப்பட்டு விட்டார்கள் என்ற மனதிருப்தியுடன் காலத்தை ஓட்டவேண்டியதுதான். நரகத்தில் வீழ்ந்துவிட்டாலும் கரையேற்றுவதுஎன்பது எவராலும் முடியாது.சொர்க்கத்தை எவர் கண்டார், நரகத்தை எவர் அளர்ந்து பார்த்தார்? சுவர்க்கமும்,நரகமும் நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கைதான், என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஒரு சிலரின் வாழ்க்கையில் பிள்ளைகுட்டிகள் இருந்தும் இல்லாது மாதிரியேதான் வாழ்கிறார்கள்.உலகத்தில், இன்றைக்கும், என்றைக்கும் பணமே பிரதானமாக கருதப்படுகிறது. பணம் காசு இல்லாத மனிதர்கள் எதற்கும்லாயக்கில்லாதவர்கள்தான் என தோன்றும்படி செய்துவிட்டார்கள், நம்மைப்போன்ற மனிதர்கள்.மனித ஜாதிக்கு தனக்கு எதுவேண்டுமோ அது கிடைக்கும் வரைமனம் அடங்காமலேயிருக்கும்.
பெற்றவர்கள் பிள்ளைகளை எவ்வாறு தூக்கியெடுத்து கொஞ்சி, கெஞ்சி தன்னால் முடிந்தளவிற்கு படிப்பைகொடுத்து பிள்ளைகள் நம்மைவிட உயர்வாக வளர்ந்து வாழவேண்டுமென்று பெற்றவர்கள் நினைக்கிறார்கள் என பிள்ளைகளுக்கு புரியாது. ஏனென்றால் அவர்கள் மனம் அவரவர்களுக்கு கிடைக்காதவற்றையே, தேடி ஏமாந்துவிடுகிறது, வெறுப்பை அடைகிறது.சுலபமாக எது கிடைத்தாலும் அதற்கு மவுசு கிடையாது.ள

பணம் காசு, வீடு வாசல் உள்ளவர்களுக்கே இந்த கதியென்றால் பணமேயில்லாத ஆட்களுக்கு என்னமாதிரி கதியேற்படும் என நினைத்துக்கூட பார்க்க முடியாது. உயிர்ஊசலாடிக்கொண்டிருக்கவே விட்டு விடுவார்களாக இருக்கும். பெற்ற பிள்ளைகளும் மனிதர்கள்தானே. தேவதைகள் அல்ல, நாம் பெற்ற பிள்ளைகள் கூட சாதாரணமான மனிதன்தான், என்பதை மறந்துவிடவேண்டாம்.