நேரத்தைப்பொறுத்தே காலம் ஓடுகின்றது. ஆனால் உலகத்தில் எதுவும், எதற்காகவும் நிற்பதில்லை. ஆனால் நமக்கிருக்கும் பரபரப்பில்,
நாட்கள் பறந்துவிட்டாலே போதுமென்றிருக்கிறது. காலத்தின்பருவமும், பிள்ளைகளின் வளர்ச்சியும் எதற்காகவும் நிற்பதில்லை.
அதே போலவே, நம் துக்கமான நேரங்களும், கடினமான நேரங்களுமே நம்மை மேலும் மனதளவில் உறுதியாக நிறுத்தப்பார்க்கிறது
என்பதில்சந்தேகமேயில்லை. இன்று வரை நான் பார்த்த அளவில், சிறியவயதில் கடினமான நேரங்களையும், போராட்டங்களையும் பார்த்தவர்களே
வாழ்க்கையில் தோல்வியைகண்டு அசந்து போய் உட்கார்ந்துவிடவில்லை. அவர்களை உதாரணமாக மற்ற பிள்ளைகளுக்கு காண்பிக்குமளவிற்கு உயர்ந்தோங்கி நிற்கிறார்கள். தடவி வளர்த்தபிள்ளைகள் மட்டுமே மனதளவில் குழம்பி, தைர்யத்தை கடைபிடிக்க முடியாது பிறரை சார்ந்து வாழ்கிறார்கள். தண்ணீரில் தடுமாறி விழுந்து நீச்சல் கற்றுக்கொண்டவர்கள், மனோதைர்யம் மிகவும் உள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்பது உண்மையே. பிள்ளைகளை அடக்கி ஒடுக்கி வளர்ப்பதை விட மனதளவில் பிறரை சார்ந்திராமல் சுதந்திரமாக யோசிக்குமாறு பழக்கவும் வேண்டும், என்பது மிகவும் முக்கியம். பிறரை சார்ந்துவாழும் நேரத்தில் நமக்குவேண்டுமென்பதை பொறுக்கியெடுத்து வாழ சுதந்திரம் கிடைப்பதேயில்லை. பலரிடம் யோசனை கேட்கும்போது பலவிதமான ஆலோசனைகள் கிடைக்கின்றன. எதை எடுத்துக்கொள்வது, எதை விடுவது என புரியாமலும் குழப்பமேற்படுகிறது. வயதான பின்புகூட ஒரு சிலருக்கு தங்களால் எதையுமே சாதிக்கமுடியாதவைகளைப்பற்றி பேசிக்கேட்டிருக்கிறேன்.

கடந்த காலத்தை திரும்பிப்பார்த்தோமானால் நாமும் எத்தனையோ சாதனைகளை புரிந்திருக்கலாமென வருத்தப்படுபவர்களையும் கண்டிருக்கிறேன். ஆனால் உதவி எத்தனை குறைவாக கிடைக்கிறதோ அத்தனை நமக்கு நல்லதே. ஏனெனில் நீரில் விழுந்து விட்டோமானால் உயிர்பிழைக்க நீச்சல் அடித்தே ஆகவேண்டும்.மேலும் உதவி கிடைத்துவிடும் என்ற தைர்யம் உள்ளமட்டும், நாமும் நம்மை சுதாரித்துக்கொள்ளவே முயற்ச்சிக்க மாட்டோம். உதவிக்காகவே நிச்சயம் காத்திருப்போம்.நேரம்,காலம் மறைந்த பின் எது கிடைத்தும் பிரயோஜனமில்லை. ஆகையால் நேரம் கிடைக்கும் போது எதையும் கற்றுக்கொண்டு வரவேண்டும்.கற்றுக்கொண்டு விட்டதற்காக பட்டம் எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் நம் மனதிற்குள் ஒரு திருப்தி கிடைக்கும்.அதை எந்த நேரத்திலும் நாம் நினைத்து உணர்ந்து மகிழலாம்.