சரோஜாவும், பரிமளாவும் பால்யவயது ,அதாவது ஒன்பது, பத்து வயதிலிருந்து ஒன்றாக உருண்டு புரண்டு குதித்து கும்மாளம் போட்டு விளையாடியவர்கள்.. சில நேரங்களில் தகராறுகள் வந்தாலும், ஸீரியசாக இருவருமே எடுத்துக்கொள்ளாமல்,  மறுநாளே பேசி , விளையாடுவார்கள். களங்கமில்லாத மனது, இருவரும் ஒன்றாக சாப்பிடுவது, பெற்றோர்களுடன் கடைக்கு சென்று துணிகள் வாங்கி தைத்துக்கொள்வார்கள். ரெடிமேட்  வாங்கிக்கொள்வதிலும் ஒரே கடையில் வாங்கப்போவது போன்றவேலைகளை சேர்ந்தே செய்வார்கள் . இரு சிநேகிதிகளும் உனக்கு நான், எனக்கு நீ என்று இருந்தபடியால், அறிமுகமில்லாதவர்கள்  சரோஜாவையும், பரிமளாவையும் கூடப்பிறந்த  சகோதரிகள் என்றே நினைத்து பேசுவார்கள். அவர்களுக்கும் கூடபிறந்த சகோதர, சகோதரிகள்  இல்லாதபடியால் மிகவும் மகிழ்ச்சியுடன் இருவரும் தகராறு செய்துகொண்டிராமல் விளையாடிக்கொண்டிருப்பார்கள். பதினெட்டு வயதாகும்போது  சரோஜாவை பெண்பார்த்து பிடித்து விட்டதாக கூறிய பிறகே பரிமளாவிற்கு நிலைமை புரிபட்டது. பரிமளாவிற்கு தான் தனியாகி விட்டது பிடிக்கவேயில்லை.

சரோஜாவை பெண்பார்த்துவிட்டு போனபின்பு கூட தானும் , இவ்வளவு பெரியவளாகி ஆகிவிட்டதாக நினைக்கவேயில்லை. அவள் கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்தபின்னரே  பரிமளாவிற்கு அவள் தனியாகி  விடுவாள் என புரிந்ததும், துக்கம் தொண்டையை அடைத்தது. ஆனால் பரிமளாவுடைய பெற்றோரும் அவளுக்காகவும் பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சிநேகிதங்கள் பிரிவும் மனதுக்கு கடினமான  நேரமாகத்தான் இருக்கும்.  சில சிநேகிதங்கள்  உறவுகளைவிட கூட நெருக்கமாக இருப்பார்கள், என்பது உண்மையே.  தனக்கென்று கிடைத்த வாழ்க்கை துணை நல்ல மனிதர்களாக இருக்கவேண்டுமே என்றகவலை எல்லா பெண்களுக்கும் சகஜமாக தோன்றக்கூடியவைதான். இப்போதெல்லாம் அவரவர் பார்த்து , தேடி தனக்கு ஒத்துவரமாதிரி   ஜோடியை   தேர்ந்தெடுக்கிறார்கள், ஆனாலும் எப்போதுமே ஒரேமாதிரி இருப்பார்கள் என்பதற்கு யார்  எவர்  உத்திரவாதம் கொடுக்கமுடியும்?    நல்லதுணையாக இருந்தால் அதிர்ஷ்டம், இல்லாவிடில்  ஆயுள் தண்டனைதான்!

கல்யாணம் என்பது லாட்டரி சீட்டு வாங்குவதுபோல்தான். நல்லதாக அமைந்துவிட்டால் யோகம்தான் . இல்லாவிடில் பாலுக்கு  பூனை  காவல் என்ற கதைதான்.