என் சிறிய வயதில் , அலமேலு அம்மாமி நடுவயதை தாண்டியவர் , காலை, மாலை இருவேளையும் எங்கள் வீட்டிற்கு வந்து கிராமத்தில் அக்ர ஹாரத்தில் என்னவிசேஷங்கள் என்பதைப்பற்றி பேசிவிட்டுப் போவார்கள். அவர் எந்த வீட்டிலும் தண்ணீர் கூட அருந்தமாட்டார்கள். சந்தியாகாலத்திற்கு பிறகு உணவும் உண்ணமாட்டார்கள் . கிராமத்தில் செல்வாக்கு உடையவர்கள், அவர்களுக்காக அரிசி, பருப்பு மற்றும் தினசரி வாழ்விற்கு வேண்டிய அத்யாவசிய சாமான்களையும், மாதாமாதம் அவர்களுக்கு தேவையான மருந்து,மாத்திரைகள், கறிகாய், மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிகொடுத்து உதவுவார்கள். வாடகை வாங்காது தங்கள் வீட்டை அவர்களுக்காக குடியிருக்க கொடுத்து உதவியிருக்கிறார்கள். ஊரில் உள்ள பெரியமனிதர்கள் அவர்களுக்கு தேவையான சாமான்களை கடைகளிலிருந்து வாங்கிக்கொடுத்து ஜாதி, மதபேதம் பார்க்காது உதவியிருக்கிறார்கள். இன்று நினைத்துப்பார்த்தால் அது எப்படி சாத்தியமாகியிருக்கும் என்று தோன்றுகிறது.
அலமேலுஅம்மாமியின் அம்மா தொண்ணூறு வயதை தாண்டியவர். அவர்களுக்காக கிராமத்து ஜனங்கள் அரிசி,பருப்பு மற்றும் தினசரி வாழ்க்கைக்கு வேண்டிய அத்யாவசியசாமான்களை மாதம் தவறாமல் அனுப்பிவைப்பார்கள். அதேபோல் மருந்து, மாத்திரைகளையும் கொடுத்து உதவுவார்கள். எங்கள் பெரியப்பா பிள்ளை கிராமத்தில் டாக்டராக இருந்தபடியால் அந்தகவலையும் அவர்களுக்கு இருந்ததில்லை. அவர்கள் வைஷ்ணவர்கள் ஆனதால் பிறர் வீட்டில் சமைத்த உணவு உட்கொள்ளமாட்டார்கள். ஆனாலும் அந்த கண்டிப்பான நியமத்துடன் வாழ ஊராரும் அவர்களுக்காக தேவையானவைகளை கொடுத்து உதவி கவனித்து பார்த்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை பெருமைக்குரிய சமாசாரமாகவே நான் கருதுகிறேன் ஏனெனில் இன்றைய நாளில் தன்னைப்பெற்றவர்களையே கவனியாது, திரைகடலோடி, திரவியங்களை தேடி, திரட்டிக்கொண்டு வந்து வாழும் நாட்களில் பெற்றோரை கவனியாது இருக்கும் பிள்ளைகளுக்கு திரும்பிப்பார்க்க நேரமில்லை, அனுகூலமான வார்த்தைகளை புன்னகை முகத்துடன் பேசடயமில்லை. இம்மாதிரியான பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகள் கற்றுக்கொண்ட பாடம் என்னவாக இருக்கும்.?
Leave A Comment