பொறாமை என்பது ஒரு சிலருக்கு அவர்கள் பிறக்கும்போதே அடைந்த குணங்களில் ஒன்று. அவர்களை அறியாமலே அவர்களையும் ஆட்டிபடைக்கும் அவகுணம் அது. இந்த பொறாமையானது நமக்கு எவரிடம் வேண்டுமானாலும் உண்டாகலாம். தன்னிடமில்லாத ஒரு சாமானாகட்டும், மற்றும் வீடு, கார், மனைவி , பிள்ளைகள், நல்ல குடும்பம் போன்ற எதுவாக வேண்டுமானாலும் சரி, அவர்களிடம் உள்ளவற்றைவிட நல்லதாக பிறருக்கு கிடைத்துவிட்டால் பொறாமையில் வெந்து சாகுபவர்களுக்கு ஜீரணிக்கவே முடியாமல் ஆகிவிடும். அவர்களால் பிறர் நல்லபடியாக வாழ்ந்து வருவதை கண்ணால் பார்க்க முடியாது. மனதால் அனுபவித்து மனமகிழ்ச்சி அடைய முடியாது. பிறர் கவலையற்று இருப்பதை காணமுடியாது. ஆகையால் அவர்கள் மனதில் எத்தனையோ துர் எண்ணங்கள் வர ஆரம்பித்து விடும். பொறாமை உள்ளவர்கள் எந்த தவறான வேலைகளையும் புரிய தயங்கவே மாட்டார்கள், என்பது என்னுடைய அனுபவ பூர்வமான கணிப்பு.
ஆகையால் உங்களுக்கு தெரிந்த அறிந்த மனிதர்களில், உறவுகளிலும் கூட பொறாமை பேய்கள் இருந்தால், அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். உங்களுடைய புதியவேலை, புதிய அனுபவங்கள், நல்லுறவுகள், எதிலுமேஅவர்களுக்கு தாங்கொணா துக்கம்தான் ஏற்படும். எதுவாக இருந்தாலும் அதை கலைத்து குட்டிச்சுவராக்கி விடுவார்கள். ஆனால் உங்கள் நலத்திலேயே அக்கறை கொண்டவர் போல் நைச்சியமாக பேசி உங்கள் வாயிலிருந்தே விவரங்களை கறந்து கொண்டு உங்களை அறவே ஒழித்து மூட்டைகட்ட பார்ப்பார்கள். தனக்கில்லாதவைகள் எவருக்கும் இருக்கக்கூடாது என்று எண்ணும் சித்தாந்தபேய்கள் இவர்கள். ஆனால் அவர்கள் மனம் நம்மைப்பார்த்து க்கொண்டிருக்கும்போதே , நம்மைப்பற்றிய முன்னாட்கள், பின்னாட்கள், வரப்போகின்ற நாட்கள் எல்லாவற்றையும் கண்கூடாக ஊடுருவி பார்ப்பது போல் நம்மை பார்த்து வயிறு எரிவார்கள்.
இம்மாதிரியான பொறாமைப்பேய்களிடம் யாவருமே அதிஜாக்கிரதையாக பழக வேண்டும். அவர்கள் பேச்சில் கிண்டல் தெரிந்தாலும் , அவர்களின் நோக்கத்தை வெளியில் காண்பிக்காமல், நைச்சியமாகப்பேசி விபரங்களை தெரிந்து கொள்வதில் பலே கில்லாடிகளாகவும் இருப்பார்கள். நமக்கும், நம்முடையவர்கள்தானே, எதுவும் அசம்பாவிதமாக, நமக்கு எதிராக செய்யத்துணியமாட்டார்கள் என்றும் நம்பி ஏமாந்து போவோம். ஆனால் உண்மையில் பொறாமை குணம் படைத்தவர்கள் என்றுமே எவருக்காகவும் , எதையும் தியாகம் செய்யும் குணம் இருக்காது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
Leave A Comment