ஒருவரைப்போல் மற்றவர் இல்லை. உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் வித்யாசமாகவே வாழ்ந்து காலத்தை ஓட்டிவருகிறார்கள். இன்றைய நாட்களில் பலருக்கும் நிறைய மனிதர்கள் தேவையில்லை என நினைத்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவரவர் தேவையான நாட்களில் மனிதர்களை ரெடிமேடாக சேர்த்துக்கொண்டு வாழமுடியுமா எனபார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
எவருக்கும் வீட்டில் கூட்டம் பிடிக்கவில்லை. கட்டுப்பாடுகள் பிடிக்கவில்லை . பலவருடங்கள் முன்பு நான்கு நாட்கள் கல்யாணம் நடந்தது, சில வருடங்கள் முன்பு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு , மறுநாள் கல்யாணம், மூன்றாவது நாள் தங்கியிருக்கும் ஒன்றிரண்டு சில்லறை ஆசாமிகளை அவரவர் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். இன்றைக்கு, கல்யாணம் என்பது கடமைக்காக செய்து கொள்வது போல் உள்ளது. மேலும் கல்யாணத்திற்கு வருபவர்கள் அவரவர்களே தங்களை கவனித்துக்கொள்ள வேண்டியதுதான். குடும்பங்கள் சுருங்கி வருகின்றன, கல்யாணம் பார்க்கவந்துள்ளவர்கள், பந்தியைப்பார்த்து, கேட்டுஉபசரிக்க யாருக்குமே தோன்றுவதில்லை. அவரவர்களே தனக்கு வேண்டியவற்றை மட்டும், கேட்டு, பிறருக்கும் உச்சரிப்பது போல் ஒரு பாவனையை காண்பித்து, தனக்குத்தானே சாப்பிட்டு விட்டு வெற்றிலை,பாக்கு கிடைத்தால் போட்டுக்கொண்டு கிளம்பவேண்டியதுதான். இப்போதெல்லாம் கல்யாண சத்திரங்களில் உபசரிக்கவென்றே ஆட்கள் அமர்த்துகிறார்களாம்..
கல்யாணவீடு மதிய சாப்பாடு முடிந்தவுடனேயே களையிழந்து காணப்படுகிறது. ஊரைவிட்டு ஊர் வந்து கல்யாணம் பார்க்க வந்தவர்கள் லஞ்ச் முடிந்தவுடன் கடைதெருவிற்கு சென்று ஏதேனும் வாங்கிக்கொண்டு வந்து, யாவரிடமும் தன் புத்திசாலித்தனத்தை காட்டுவதுபோல் காண்பித்து மற்ற பெண்மணிகளை கிளப்புகிறாற் போல் பேசி விட்டு போய்விடுவார்கள். அவர்கள் கிளம்பியவுடன் இங்கு தூங்கிக்கொண்டிருந்த புருஷன் எழுந்துவந்து காபி ரெடியானவுடன் என்னை எழுப்பு என்று கூறி மறுபடியும் குறட்டையை கர்ஜிப்பது போல் கத்திக்கொண்டு தூங்கிவிடுவான்.
காலம் மாறிவிட்டது என்பதற்கு பதிலாக மனித மனங்கள் மிகவும் மாறிவிட்டன என கூறுவதே பொருத்தமாக இருக்கும். ஆசை என்பதற்கும் ஒருஅளவு உள்ளது. மனிதர்கள் இருப்பது எல்லாவற்றையுமே தாங்களேஅனுபவித்து விடவேண்டும் என நினைத்து செயல்படுகிறார்கள். பரந்த மனப்பான்மை மறைந்து சுயநலம்அதிகமாகவே காணப்படுகிறது. பெண்மணிகள் பொறுப்பை எடுத்துக்கொண்டு நிர்வாகம் செய்வதுவரவேற்க தக்கதே. பெண்மணிகள் கலந்தாலோசித்து தங்கள் குடும்ப நலத்திற்காக பாடுபடதயங்கமாட்டார்கள். இந்நாட்களில் எல்லாவித டிபார்ட்மெண்டிலும் பெண்களை காணமுடிகிறது. பெண்மணிகள் அவசரமாக முடிவு எடுக்க மாட்டார்கள், ஆற, அமர கலந்து ஆலோசித்து பார்த்து நிதானமாக முடிவெடுப்பதில் வல்லவர்கள். ஆனால் அவசரப்பட்டு முடிவெடுத்தால் ஆயுள் முடியுமட்டும் திண்டாட்டம்தான் , என்பதை புரிந்துகொண்டு முடிவெடுப்பார்கள். அனுபவமானவர்களிடம் கலந்தாலோசிக்க தயங்கமாட்டார்கள். அவசரமான முடிவுகள் ஆபத்தையே அள்ளிக்கொடுத்துவிடும் எனநினைப்பவர்கள். பொறுத்திருந்து பார்க்க வேண்டும், குடும்பத்திற்கு எது நலம் தரும் என்பது?
அந்தக்காலத்தில் வெள்ளையர்களை கிண்டல் செய்த காலம் போய் நமக்கே அந்த கதி இப்போது வந்துள்ளது . உன் வீட்டில் வந்து தங்கினால் எனக்கு என்ன தருவாய், என்வீட்டில் வந்து தங்கினால் எனக்கு என்ன கொண்டுவருகிறாய்? உன் பிள்ளையும் , என் பெண்ணும் பேசி விளையாடுகிறார்கள் என கூறிக்கொள்ளும் நாளும் அதிக தூரத்திலில்லை, என்றே தோன்றுகிறது. எல்லாவித ஏமாற்றங்களையும் தாங்கிக்கொள்ளும் மனதை அடைய தெய்வம்தான் வழிகாட்டவேண்டும்.
Leave A Comment