அந்த காலத்தில், ஊர்சுற்றும் மனிதர்களை, கோவில்காளை என்று கூறுவார்கள். கோவிலுக்கு சொந்தமான காளைகள் மட்டும் அவைகளின் இஷ்டம் போல் கிராமத்தில் சுற்றிக்கொண்டிருக்கும், எவருடைய தோட்டத்திலும் நுழைந்து தன்னிஷ்டம் போல் நுழைந்து பயிர்களை துவம்சம் செய்து தின்னும். கோவிலுக்கு சொந்தமான காளைகள் ஆனதால் எவரும், எதுவும் கூறமாட்டார்கள். கூறினால் பாவம் கிடைக்கும் என்றதொரு நம்பிக்கையும் இருந்தது. நம்பிக்கையை விட ஆண்டவனிடம் ஒரு பயமிருந்தது என்பதே உண்மை. மாட்டை சாப்பிட விடாமல் துரத்தி விட்டால், நம்பிள்ளைகள் சாப்பாட்டுக்கு திண்டாடுவார்களோ என்ற பயமுமிருந்தது. ஆனால் இன்றைய நாட்களில் எவரும் அந்தமாதிரியான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதில்லை. எவருக்கு எப்படி வாழப்பிடிக்கின்றதோ அதன்படியே வாழ்கிறார்கள். எவரும் எதைப்பற்றியும் பேசவோ, விமர்சிக்கவோ தயாராக இருப்பதில்லை. விமர்சித்தாலும் எவரும் கேட்பதற்கும் தயாராக இல்லை. அவரவருக்கு என்ன தோன்றுகிறதோ, அதன்படி மனம் போன போக்கில் வாழ்ந்தும் வருகிறார்கள்.
முன்காலத்தில், கூட்டுக்குடும்பங்களில் வாழ்ந்திருந்த நாட்களில் , சிறியவர்களுக்கு மதிப்பு கொடுத்து பேசமாட்டார்கள். இன்றோ சிறிய பிள்ளைகளுக்கு ஏகப்பட்ட மதிப்பு கிடைக்கின்றது. அந்தக்காலத்தில் வீட்டுக்குவீடு குறைந்தபட்சம் ஐந்து அல்லது ஆறு பிள்ளைகள் இருப்பது சகஜமான விஷயம். அந்த நாளில் வீட்டிற்கு விருந்தாளி வந்தால் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்க பிள்ளைகளின் தகப்பனார் பிள்ளைகளை கூப்பிட்டால் மறுபேச்சு பேசாது கைகளை பின்பக்கம் வைத்துக்கொண்டு ஆடாமல் அசையாமல் எதிரில் வந்து நிற்கவேண்டும் என்பது மட்டுமில்லாமல், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மரியாதையாகவும், அடக்கமாகவும் பதில் கூறவேண்டும். துளி ஏறுமாறாக பதிலளித்தோமானால் விருந்தாளி கிளம்பியவுடன் முதுகு தோல் உரிந்து விடும். அந்த பயம் இருக்கும்போது தனக்குத்தானே அடக்கம், மரியாதை எல்லாமே தானாகவே பிள்ளைகளுக்கும் வந்து விடும். அந்தக்காலத்து பெற்றோர்களுக்கும் அது ஒரு பெருமையான விஷயமாக நினைத்து கர்வமடைவார்கள்.
இன்றோ இப்போது வந்தானே ,அவன்தான் என்னுடைய இரண்டாவது பிள்ளை, அவனுக்கு மூச்சை இழுத்து விடக்கூட நேரமில்லை. அவனுக்கு எங்களுடன் பேசவே நேரமில்லை. சதா படிப்பு , படிப்புதான் . அவனுடைய ஒவ்வொரு மூச்சும் அவனுடைய எதிர்காலத்தையே நினைத்துத்தான் விடுகிறான் என பிள்ளைகளுக்காக பரிந்து பேசி அவர்களை பற்றி உயர்வாக கூறுகிறார்கள். ஆகையால் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களின் பலவீனம் தெரிகிறது.
காலங்கள் மாறி, அதற்கேற்றாற்போல் காட்சிகளும் மாறிக்கொண்டே வருகின்றன.
Leave A Comment