சுமார்  70 வருடங்கள் முன்பு எங்கள் மங்களபெரியம்மா பள்ளிப்படிப்பு , கும்பகோணத்தில் முடித்து விட்டவுடன்,   பெரியப்பாவும் BA படித்துவிட்டு , ரயில்வேஸில்   வேலையாக இருந்ததால் எட்டாம் வகுப்பு படித்த பெண்ணை மணம் முடித்து விட்ட பின், பெரியம்மாவை புக்ககத்திற்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால் இரண்டொரு வருடங்கள் ஆனதும் மாப்பிள்ளை பெரியப்பா  ரயில்வே வேலையை உதறித்ள்ளிவிட்டு  கிராமத்தில் குடியேறிவிட  தீர்மானித்துவிட்டார். ஆனால் பெரியம்மாவின் தாயார் கும்பகோணத்திலேயே தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்தபடியால், தன் பிள்ளைகளை டவுனிலேயே  அம்மாவுடன் இருத்திவைத்து படிக்க ஏற்பாடு செய்து விட்டார். டவுனில் வளர்ந்த பிள்ளைகளுக்கும் , கிராமத்தில்  வசிக்க மனமில்லாத பிள்ளைகளுக்கும்,  இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது.    தனிமையில் வாழ்ந்த   அவர்களுடைய  பாட்டிக்கும்   ஒரு நல்லமாற்றமாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை.  பெரியப்பாவின் பிள்ளைகள் லீகிற்கு கிராமத்திற்கு வரும்போது நாங்கள் யாவரும் அவர்கள் கும்பகோணத்தை பற்றி பேசுவதை கேட்டு மகிழ்வதைவிட  எரிச்சலும் அடைவோம். எங்கள் கிராமம் சமுத்திரக்கரையில் இருந்தபடியால், கிராமத்து மண் ஆற்றுமணல்  மாதிரியும், நடக்கும்போது கால் புதைந்தும் போகும். எங்கள் ஒன்றுவிட்ட சகோதரிகளோ செருப்பு போட்டுக்கொண்டு நடப்பார்கள் . பார்க்கும் போது பொறாமையாகவேயிருக்கும் .ஆனால் வெளியில் காண்பிக்காதபடி வாடி , நான் உன்கையை பிடித்துக்கொள்கிறேன்  எனக்கூறி அவர்கள் கையை பிடித்துக்கொண்டு அழைத்துப்போவோம். திரும்ப வரும்போது  தனியாக வாடி எனக்கூறி பிராக்டீஸ் கொடுப்போம்.

அவர்களுடைய மூத்த பிள்ளை   எங்களுடைய  ஒன்று விட்ட  சகோதரர் மேற்படிப்பு படிக்க டெல்லிக்கு கிளம்பியதும்   இன்னம் மறக்கவில்லை. வீட்டில், பாலு அண்ணா டெல்லிக்கு பட்டிணத்திலிருந்து ரயிலில் நாளைக்கு புது டில்லிக்கு கிளம்பப்போகிறார் என்று கிராமத்தில் ஒரே அமர்க்களம். அவர் ஏறப்போகும்  பஸ்ஸிற்கு மாலை போட்டு சந்தனம்,குங்குமம் இட்டு , பெருமாளின் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு  பஸ்ஸின் ஏறியவுடன் பெருமாள் கோயில் வாயிலில் சதிர்க்காய்  தேங்காய் உடைத்து தீபாராதனை எடுத்துக்கொண்டு  கிளம்பியது இன்னம் ஞாபகத்தில் நிலைத்து நிற்கிறது. எங்கள் பெரியம்மா ஹோமியோபதி டாக்டராகவும் இருந்திருக்கிறார் . சிறிய பிள்ளைகளுக்கு வயிற்றை சோதித்து பார்த்து மருந்து கொடுப்பதில் எக்ஸ்பர்ட்டாக இருந்து வந்தார், மங்கள பெரியம்மா. அந்தக்காலத்தில், பெண்மணிகளுக்கு அதிகமாக உலக விவகாரங்கள் புரியாது இருந்த காலத்தில் எங்களைப்போன்ற வாண்டுபிள்ளைகளுக்கு  எங்கள் பெரியம்மா ஒரு உதாரணமாகவே இருந்தார், என்பதில் எங்கள் குடும்பமே மனம் பூரித்துப்போனோம்.  இன்றும் மங்கள  பெரியம்மாவை பற்றி நினைத்தாலும் பேசினாலும் மனம்  பெருமையில்  மனம்    பூரித்து விடுகிறது. இவையெல்லாம் நடந்து பலவருடங்கள்ஆகி விட்டாலும், இன்று நினைத்துப்பார்த்தாலும் மனம்  நிரம்பி விடுகிறது என்பதில் சந்தேகமேயில்லை.