உலகத்தில் எத்தனையோ உயர்ந்த, பணம் படைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் குணமில்லாத மனிதர்களை பார்க்க, பழக நேர்ந்துவிட்டால் மனம் நொந்து விடுகிறது. ஏனென்றால் அவர்கள் குணத்தை மாற்றமுடியாத அளவுக்கு பிடிவாத குணம் படைத்தவர்களாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். தனக்கு வேண்டியவைகளையே ஒருசிலர் நினைத்துக்கொண்டு அடையும் மட்டும் மறந்துவிடாது ஒரே நோக்கத்துடன் வாழ்பவர்கள் பலர். பணமிருப்பதால் பண்புகள் வளர்வதில்லை, பண்புகள் இருந்தாலும் பலர் தன்னுடைய நிலைமையை மறந்து செயல்படுகிறார்கள். அவரவர்க்கு தன் தேவைகள் தெரிகின்றன, பலருக்கு பிறர் வைத்திருப்பதிலேயே கண்கள் இருக்கும். அம்மா என்பவளுக்கு தன் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் மீதுதான் கண்காணிப்பு இருக்கும்.

இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் மனதில் ஒருவித பீதியிருப்பதுதான் காரணம். தன்னால் எதையுமே சாதிக்க முடியாதோ என்ற காரணம்தான், வேறொன்றுமில்லை. ஒருசிலருக்கு சில இக்கட்டான நேரங்களில், தன் உயிரைபற்றி கவலை கொள்ளாது, மற்றவர்களை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம்தான் மேல்நோக்கியிருக்கும். அந்தகுணம் கற்றுக்கொடுத்து வருவதில்லை, சுயமாக மனதில் தோன்றவேண்டும். வாழ்க்கையில் சுயநலத்தையே நினைத்து செயல்படுபவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வது ஒரு வாழ்க்கையே அல்ல. வேறு எதுவுமே அவர்களுக்கு தோன்றுவது கிடையாது. அவ்வளவுதான். இதற்காக அவர்கள் சமூகத்தில் சேர்க்கப்பட முடியாதவர்கள் அல்ல. ஆனால் மனித சமூகத்தில் வாழ சில சற்குணங்கள் மிகவும் அத்யாவாசமே.

நம்மைப்பெற்ற தாய்மார்கள் நமக்கு வரும் கடினமான நேரங்களை கண்டு ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். தன்னால் எத்தனை ஒத்தாசைகள் செய்தும் நம்மை தூக்கி விடப்பார்ப்பார்கள். தங்களால் உதவி கொடுக்க முடியாமல் ஆகிவிட்டால், ஆண்டவன் காலடியில் பூக்களை சமர்ப்பித்து நமக்காக வேண்டுதல்கள் செய்து முடிக்கப்பார்ப்பார்கள். அந்தக்கால தாய்மார்களுக்கு உலக விவகாரமே தெரியாமல் ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே வளைய வந்து கொண்டிருந்தார்கள். தாய் என்பவள் தனக்கென வைத்துக்கொள்ளாமல் குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் தன் உடல்நலத்தைக்கூட பேணாமல், கவனித்துக்கொள்வாள்.

இன்றைய நாட்களின் பெற்றோர்களாவது படிப்பறிவு உள்ளவர்கள். பணம் சம்பாதிக்கும் திறமைகளை அடைந்திருக்கிறார்கள். காலத்திற்கேற்றாற் போல் காட்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. வித,விதமான இடையூறுகளை கண்களால் கண்டும், உண்மை நிலையை சமாளிக்க பார்ப்பார்கள்.அந்தக்காலத்து அம்மாக்களுக்கு, படிப்பறிவுமில்லாது வெளிஉலக விவகாரங்களும் தெரியாது ஒரே மனக்குழப்பத்திலேயே உழன்று கொண்டிருப்பார்கள். ஆண்கள்மட்டுமே எல்லாவிவரங்களும் அறிந்தவர்கள், என கருதப்பட்டு அவர்களால் மட்டுமே எல்லாவிதமான இடையூறுகளையும் தவிர்க்கமுடியும் என்ற நம்பிக்கை அடைந்தவர்கள். அன்பில் சிறந்த அம்மாவிற்கு சரிசமம் எவருமில்லை என்றுதான் பிள்ளைகள் கருதுவார்கள். மற்றும் அம்மா என்பவள் மன்னிப்பதிலும் சிறந்தவள். இப்படி எத்தனையோ சிறப்புக்களை பலர் பெற்றிருந்தாலும், துர்குண தாய்மார்களும் இருக்கிறார்கள். உலகம் மாறிவிட்டதாக கூறுகிறார்கள், உண்மையில் மனித மனம் மாறிவிட்டது என்றுதான் கூறப்படவேண்டும்.

நான் எழுதியிருப்பதை படித்துப்பார்த்து உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்துங்கள்.