இன்றைய தலைமுறைகள்,  நாங்களும் எங்கள் பெற்றோர்களும்  நண்பர்கள் போலவே பேசிக்கொள்வோம், பகிர்ந்து கொள்வோம் என்று பேசுவதை கேட்கிறோம். அம்மாவும் பிள்ளைகளும், அப்பாவும் பெண்களும் நண்பர்களாக எப்படி ஆக முடியும்?  இல்லை அம்மாவும் பெண்களும், அப்பாவும் பிள்ளைகளும் நண்பர்களாக எப்படி இருக்கமுடியும்?

பிள்ளைகள் பெற்றோருக்கு கடமை பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பெற்றோர்கள்  என்பவர்களுக்கு உயர்வான ஸ்தானம் நம் குடும்பங்களில். நண்பர்களையும், பெற்றோர்களையும் சமதளத்தில் நிற்க வைக்க முடியுமா?  நண்பர்களிடம் காட்டுவது சிநேகபாவம்,  சிநேகத்தில்  மனம் முறிந்தால் துண்டித்துக்கொண்டு விடுகிறார்கள்.ம

ஆனால் நாம் பெற்றோரிடம் காட்டுவது சிநேகபாவமில்லை, ரத்தபாசம். நமக்கு உயிர்தந்தவர்கள், நமக்காக வாழ்ந்தவர்கள், நம் மரியாதைக்குரியவர்கள். பிள்ளைகளை பெற்று வளர்த்தது அவர்கள் கடமை மாதிரி , அவர்கள் வயது காலத்தில் அவர்களுக்கு கை பிடித்து நடத்துவது பிள்ளைகளின் கடமையென நினைக்கும் தேசம் இது.   நண்பர்களுக்கு அந்தமாதிரி கடமை ஏதேனும் உண்டா ? நம் வாழ்வில் நண்பர்களுக்கு நிச்சயமாக இடம் இருக்கிறது. மனக்கவலைகளை பகிர்ந்து கொள்ளலாம். உதவிகள் பெறலாம், கொடுக்கலாம். நம்மை ஓரளவுக்கு பாதுகாக்க ஓடி வரலாம்.  தோள் கொடுக்க முயல்வார்கள், ஆனால் நம்மை  தன் நெஞ்சில்  வைத்து காப்பார்களா?

சில வருடங்கள் முன்பு மேல்நாடுகளில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவில்  பெரிய பள்ளத்தாக்கு போன்ற இடைவெளி ஏற்பட்டிருந்தது . அதை மாற்றும் நோக்கத்தில் அவர்கள்  இந்த மாதிரி ஒரு யோசனையை கொண்டுவந்து பெற்றோர்கள் பிள்ளைகளின் தோழர்கள் போலவே நடந்து கொண்டு,ஒருவரை ஒருவர் தங்களுடைய எண்ணங்களை புரிந்து கொண்டும், பரிமாறிக்கொண்டும் வாழ்க்கையை நல்லவிதமாக வாழ வேண்டும் என ஆரம்பித்ததின் விளைவுதான், பெற்றோரும் பிள்ளைகளும் சிநேகிதர்கள் என்ற கோஷம் எழுந்ததின் காரணம்.  ஆனால் மேற்கத்திய நாடுகளில் இந்த பெற்றோர், பிள்ளை சிநேகிதம், நண்பர்கள் என்பது கொஞ்சமேனும் ஒத்து வரும். நம் தேசத்து கலாசார கருத்துகள்  துளிக்கூட அதனுடன் ஒத்துவராது, என்பதும் உண்மையே.

தோளுக்கு மிஞ்சியவனை தோழனாக கருது, என்று நம் பெரியவர்கள் சொன்னதையும் இப்படி திரித்து பேசுகிறார்களோ என்றும் நான் நினைக்கிறேன். நாமெல்லோரும் நம்மை விட வயதில் முதிர்ந்தவர்கள்தான் எல்லாமே தெரிந்த ஞானிகளாக என நினைத்து வளர்ந்தவர்கள்.  நம்மால் அவர்களை தோழர்களாக நினைத்து பார்க்கமுடியுமா?