நம் வாழ்க்கையில்  இன்னல்கள் வரும்போதும் சரி, இன்பமான அனுபவங்களும் வரும்போதும் சரி , ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்பத்தில்ஒவ்வொருவருக்கும் சரிக்கு சரி பங்கு உண்டு என்பதை உணர்த்த வேண்டியது அவசியமான ஒரு யோசனை. புதிதாக வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள், மருமகனுக்கும், குடும்பங்களில் கஷ்ட, நஷ்டங்களிலும் பங்கேற்க கற்றுக்கொடுத்து  விட வேண்டியது மிகவும் அவசியம்.

குடும்பம் என்பது மனித உடல் போன்றது. உடலின் பாகங்கள் எப்படி ஒவ்வொரு அங்கமும் தனிதனியாக அவைகளுடைய வேலை செய்வது போலவே வீட்டிலிருக்கும் யாவருமே ஏதாவது ஒருபொறுப்பை எடுத்துக்கொண்டு செய்ய ஆரம்பித்தால் வீட்டிற்கு  எந்த விதங்களிலெல்லாம் உதவ முடியும் என்பதும்  புரிய ஆரம்பிக்கும். மற்றவர்களை உற்சாகப்படுத்தி ஈடுபட வைத்தால்  நன்றாகவே  முடியும். வேலைகளை பகிர்ந்து கொள்வதிலும், செய்து முடிப்பதிலும் ஆவல் அதிகரிக்கும்.

பார்க்கப்போனால் பழைய நாட்கள் போல் வேலைகளை கஷ்டப்பட்டு செய்வதற்கு அவசியமே, இல்லாமலும் உள்ளது.  ஆனால் எந்த வேலையானாலும் மனதை செலுத்திதான் செய்தாக  வேண்டும்.   அதுவும்தவிர ஆரம்பத்திலேயே நாமும் பழக்கிக் கொண்டு விட்டால் எதுவுமே  கடினமாக இராது.   இந்தகாலத்து பெண்களும் எல்லாவற்றையுமே லாவகமாக செய்ய கற்றுக்கொண்டும் இருக்கிறார்கள்.  எந்த ஒரு விஷயத்தையும் சூழ்நிலைகளுக்கு ஆட்களுக்கு தக்கபடி சாமர்த்தியமாகவும் கையாளுகிறார்கள். அதே சமயத்தில் வீட்டிலிருக்கும் ஆண்களுக்கும் வீட்டில் நடந்துவரும் நுணுக்கமான சில விவரங்கள் புரிய ஆரம்பிப்பதற்குள் காலம் ஓடிப்போகாமலும் இருக்கும். ஆண்கள் தங்கள் சௌகர்யத்திற்கும் இடைஞ்சல் வராதபடியும் கவனித்து கொண்டும் விடுவார்கள்.

தற்காலத்தில் குடும்பங்கள்  சுருங்கிவிட்டன.  போட்டிக்கு ஆட்கள் இருந்தால்தானே சண்டை. ஆனாலும் எதற்குமே சரியான சமயத்தில் அணை போட ஆண்களுக்கும்   தெரிய வேண்டும். இல்லாவிடில் அவன் கதியை  பற்றி கேட்கவே வேண்டாம். மனித வாழ்க்கையில் எதற்குமே நிரந்தரமான பரிகாரம் என்பது கிடையாது.  சமயத்திற்கு ஏற்றாற்போல் புரிந்து கொண்டு மாற்றிக்கொள்ளவும், மாறியாகவும்வேண்டும்.

நல்ல குடும்பங்களை சரியாக நிர்வகிக்கத் தெரியாதபடியாலேயேதான் பல  குடும்பங்கள் வீணாகி விடுகின்றன .