இதெல்லாம் நடந்து முடிந்த கதையானாலும் , திரும்ப நினைத்துப்பார்த்தால், மனதிற்கு நன்றாகவே இருக்கிறது. ஒருசமயம் மூன்று வருட இடைவெளிக்கு பின் அண்ணாவிடம் இருந்த அம்மாவை பார்க்க போயிருக்கிறேன். வயதான தாயார் சைகையில் என்னைக்காட்டி யார் இது என்று அண்ணாவைப்பார்த்து கேட்கிறார். அண்ணா தனக்கும் தெரியாது என்று சைகையில் காட்டினார், டேய் தம்பி, இந்த பெண்ணின் கையில் ஏதேனும் சில்லறையை கொடுத்து அனுப்பேன் என எனக்காக பரிந்து பேசுவதை கேட்டதும் , முதிர்ந்த வயது என்பது எத்தனை தயை காட்டுகிறது எனநினைத்துப்பார்த்தேன். தன்குழந்தையை அடையாளம் கண்டு கொள்ள முடியாது தவிக்கும் அம்மாவின் வயிற்றை தொட்டுக்காட்டி பிள்ளையை கையால் தூக்கி தூங்க வைக்கும் போஸ் காட்டினேன். ம்ஹூம், என்குழந்தையா நீ ? என கேட்டு அண்ணாவைப்பார்க்க, அண்ணா ஆம் என தலையாட்டுகிறார். படிக்கும் பிள்ளைகளை வாய்பாட்டின் நடுவில் கேட்டு விட்டால் திரு, திருவென்று முழிக்குமே , அதே மாதிரி திணறுகிறார், என் கண்களை குடைவது போல் பார்த்துக்கொண்டே, தான் பெற்ற பிள்ளைகளின் பெயர்களை சொல்லி வரும்போது என் பெயர் வரும்போது டக்கென்று நிறுத்தி தன் பொக்கை வாயைத்திறந்து என்னைப்பார்த்து சிரிக்கிறார். நானும் அம்மாவை பார்க்கிறேன், ஆனால் எனக்கு சிரிப்பு வரவில்லை. என் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. கிராமத்தில் வீட்டை நடத்தியது மட்டுமில்லாது சென்னை வந்த பிறகு கூட அப்பாவை தவிர ஓரிரண்டு பேரப்பிள்ளைகளுக்கும் சமையல் செய்து போட்டு கவனித்து காலம் தள்ளிய அம்மாவா இது எனநினைத்து , அட , இதுதாண்டாப்பா வாழ்வின் மாயம் என்று நினைத்தேன் .(நடமாடும் பிணம் சாகப்போகும், பிணத்தை நினைத்து ஒலமிட்டதாம்) என பழமொழி உள்ளதே அது எத்தனை உண்மை என்று நினைத்து பார்த்துக்கொண்டு என்னிடத்திற்கு கிளம்பிவந்தேன்.
Thanks, great article.