பல சமயங்களில் மனதை உருவி தனியாக எடுத்து வைக்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. அது நடக்காத காரியம் என தெரிந்தும், இந்த பாரமான மனதை தூக்கிக்கொண்டு அலைவது கஷ்டமான வேலையாக படுகிறது. அடிபட்ட மனதை எப்படி தேற்றுவது என புரியவில்லையே. திரும்ப அடைய முடியாது என்றாலும் மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறதே. எங்கு போனாலும் , எதைப்பார்த்தாலும் அதே ஞாபகம்தான் மனதை கலக்குகிறது.
உயிர் காற்று மாதிரி என்று கூறுகிறார்கள். நம்மிலிருந்து உருவான ஒரு உயிர்காற்று காற்றோடு கலந்து விடுவதாக கூறுகிறார்களே, அப்படியானால் மரங்களையும் செடிகளையும் காற்றில் ஆடுவதைப்பார்த்து பறிகொடுத்த மனம் திருப்தியடையவில்லையே? மனதை போலவே காற்றையும் நாம் கண்ணால் காண முடியவில்லை. எத்தனை துக்கமிருந்தாலும் , உப்பில்லாத சாப்பாட்டை சாப்பிட முடிவதில்லை. காப்பிகுடிக்காமல் இருக்க முடிவதில்லை. நமக்கு மனம் தலையில் உள்ளதா,உடம்பிற்குள் உள்ளதா, நாக்கில் இருக்கிறதா ? சில சமயங்களில் கண்ணுக்கு தெரியாத மனதை நினைத்துப்பார்த்தால் கோபமாகவும் வருகிறது. தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் இல்லையென்றால் சாப்பிட வேண்டாம் போல் இருக்கிறதே. தப்பித்தவறி நெருப்பில் கை பட்டுவிட்டால் கை தானே பின் வாங்குகிறதே. லைட்டைபோடும் போது ஞாபகமாக ஈரக்கையை துடைத்துக்கொண்டு போடுகிறேனே. இதையெல்லாம் நினைத்தால் மனத்திற்கு தன்னில்தான் அபிமானம் அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மை என தெரிகிறது.
Unique topic, very well written….