புதுமணமான தம்பதியருக்கு எதற்காக பெரியவர்களின் தலையீடு அவசியமாக இருக்கிற தோ அப்போது கிடைத்தாலே போதுமானது. அநாவசியமான பேச்சுக்களும், குற்றம் குறைகள் கூறுவதையும் நிறுத்தியே ஆகவேண்டும். எந்த குற்றம் குறைகளையும் பேசப்பேச வளர்ந்து கொண்டுதான் போகும். எத்தனைக்கத்தனை குறைகளைப்பற்றி பேசுகிறோமோ அத்தனையும் எரியும் நெருப்பில் நெய்வார்த்தாற்போல் பற்றியெரியும் என்பது உண்மை.

ஆகையினால் எந்தவிதமான செய்த குற்றத்தையும் நாம் திருப்பியனுப்பவோ, நடக்கவேயில்லை என்று சொல்லவோ முடியாது. எத்தனை முறை பேசினாலும் நடந்தது ஏதோ அபாக்யம்தான் என்று கூறி அந்த பேச்சே எழாதபடி முற்றுப்புள்ளி வைத்து விடவேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிடில் மனக்கசப்புதான் மேலிட்டு அவர்கள் ஒன்று சொன்னால் மற்றவர் நான்கு பேச்சுகள் சொல்லி மறுபடி கிளறி, கிளறி எரிமலையாக வெடிக்க வைத்து வேடிக்கை பார்ப்பது அவசியமா என்பது யோசிக்க வேண்டும்.

மற்றும் ஒவ்வொரு வீட்டுபழக்கங்கள் வெவ்வேறுவிதமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. புது இடத்திற்கு வரும்பெண்ணிடம் மென்மையாகவும், தன்பிள்ளைகளை போலவும் பாவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் வளர்ந்தவிதமும் வெவ்வேறு மாதிரியாகத்தான் இருக்கும்.

அதற்காக நம்வீட்டிற்கு வந்த பெண்ணையோ, மாப்பிள்ளையையோ தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடவேண்டிய அவசியமேயில்லை. அப்படி செய்தோமானால் எப்போதுமே எதிர்பார்ப்பார்கள். சாஸ்திர, சம்பிரதாயங்களை தவிர மற்றபடி நம் வீட்டு மனிதர்களை போலவே நடத்தினாலே போதுமானது.  நம் வீட்டு பழக்க வழக்கங்கள் அவர்களுக்கும் பிடித்திருந்தால்தான் அவர்களும் நம்முடையவைகளை பின்பற்றுவார்கள்.

நாம்யாரையும் எதற்குமே வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள செய்வது புத்திசாலித்தனம் ஆகாது.  கூட்டுக்குடும்பம் நடத்துவது ரோடில் காட்டும் கூத்தாடிகளின் வேடிக்கை மாதிரிதான். எந்த நிமிடமும் சரிந்து விடக்கூடும்.   கூட்டுக்குடும்பம்  வீட்டுத்தலைவிக்கு டபுள் தலைவலிதான் என்பதில் சந்தேகமேயில்லை.