சில வருடங்கள் முன்பு அமெரிக்காவில் வாழ்ந்து வரும் என் பெண்ணுக்கு, பிள்ளை பிறப்பிற்காக சென்றிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், அதே இடத்தில் வசிக்கும் என் தங்கைபெண்,மாப்பிள்ளை என் பெண் வீட்டிற்கு வந்து போகும்போது நான் திரும்ப இந்தியா கிளம்புமுன் என்னை அவர்கள் வீட்டிற்கு வந்து ஒரு வாரமாவது தங்க அழைத்தார்கள். எனக்கும் மனதுக்கு நன்றாக இருந்தது. அவர்களுடன் போய் தங்கிவர கிளம்பி போனேன்.
அவர்களிருவரும் காலையில் ஆபீஸுக்கு போய் மாலையில் திரும்புவார்கள். அந்த பெண்ணுக்கும் மசக்கை சமயமாக இருந்ததால், இரவு சமையலை அவர்கள் வருவதற்கு முன் முடித்துவிட்டு சாயங்காலம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்க காத்திருப்பேன். என்ன பிடிக்குமென்று கேட்டால் எதுவானாலும் பிடிக்கும் என்று கூறுவார்கள். இப்படி சொன்னால் கஷ்டமேயில்லையே. Fridgeல் குடைந்து என்ன கறிகாய் இருக்கிறதோ அவைகளுக்கு தகுந்தாற் போல் எனக்குத்தெரிந்த, முடிந்த சமையலை பண்ணிவிட்டு, ஸ்லோகங்கள் சொல்வேன், டெலிபோனில் நமக்குத்தெரிந்தவர்களின் கால் வந்தால் எடுத்துப்பேசிக்கொண்டிருப்பேன். மற்றும் மத்தியான வேளைகளில் புத்தகங்கள் படிப்பேன். வேடிக்கை பார்க்கும் பழக்கமில்லாத படியால் என்னிடம் நிறைய டயமிருக்கும்.
இப்போதெல்லாம் மாப்பிள்ளை, மாமியார் என்பது இடைஞ்சலான உறவாக கொண்டாடும் பழக்கமில்லாத படியால் எனக்கு அவர்களுடன் தங்கியிருந்ததும் மிகவும் சந்தோஷமான ஒரு அனுபவம். அவர்களிருவரும் சாயங்காலம் திரும்பி வந்து என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். பெண், மாப்பிள்ளையுடன் அவர்கள் குடும்பம், எங்கள் சுற்று வட்டாரங்களை பற்றியும் பேசிக்கொண்டிருப்போம்.
ஒருநாள் மாப்பிள்ளை கேட்டார் பெரியப்பா சாயங்கால வேளைகளில் எப்படி பொழுது போக்குவார் என்று ? நான் யதார்த்தமாக மாலையில் ஆபீஸிலிருந்து திரும்பி வந்து காபி, ஸ்நாக்ஸ் முடித்துவிட்டு மொட்டைமாடிக்கு தண்ணி போட போய் விடுவார் என்று சாதாரணமாக கூறியதும் அவர்கள் முகம் வாடியதை கவனித்தேன், என்ன ஏது என்று கேட்க தோன்றவில்லை எனக்கு.
அடுத்தவாரம் நான் என் பெண் வீட்டிற்கு கிளம்புமுன் மாப்பிள்ளை தயக்கத்துடன் சொன்னார் , பெரியம்மா, நீங்கள் வந்திருந்தது எங்களுக்கு மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் பெரியப்பா தினந்தோறும் சாயங்காலம் தண்ணி போட மாடிக்கு போவார் எனகேட்டதுதான் எனக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது என்றவுடன் நான் சொன்னேன், பின்னே என்ன சும்மாவா, சுமார் ஐம்பது தொட்டிகளில் செடி வளர்ப்பதால் தண்ணீ போட்டு கவனிக்க வேண்டுமே ..என்றபின் மாப்பிள்ளையின் முகம் மலர்ந்தது பார்த்தபின், பேசி கேட்டபின் தெரியவந்தது எனக்கு விஷயம். பிறகு ஒரே சிரிப்புதான் அரை மணிநேரத்திற்கு. பாவம், எதுவுமே தவறு செய்யாத நபருக்கு எந்தமாதிரியான அவப்பெயர் கிடைத்தது என்று நினைத்துப்பார்ப்பேன்.
Leave A Comment