எத்தனை உயர்வாக  வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்திருந்தாலும், அவரவருடைய கடைசி காலமானது, தான் பெற்று, வளர்த்த பிள்ளைகுட்டிகளின் சந்தோஷத்தை பார்த்து , வாழ்ந்து மறையும் காலம்தான் மிக முக்கியமான கட்டம், நம்முடைய கலாசாரத்தில் .

சிறியவயதில் நம்மையறியாமலேயே பல ஆட்டபாட்டங்களுக்கு  நடுவில் வளர்ந்து விடுவோம். நடுவயதை நாம் எட்டும்போதுதான் நமக்கு வாழ்வின் முக்யத்துவம் தெரியவருகிறது. அப்போது நம்பிள்ளைகளின் படிப்பு, வீட்டின் பற்றாக்குறைக்கு ஈடுகொடுத்து, மற்றும் குடும்ப பிரச்னைகளை தலையில் ஏற்று நடத்தும் காலம் உண்டாகிறது.

பிள்ளைகளின் மேல்படிப்பு , மற்றும் அவர்களை  உருவகப்படுத்தி கொண்டு வரவேண்டிய பொறுப்பையும் ஒழுங்காக செய்து நமக்கும் நல்லபெயர் கிடைக்க  கடுமையாக உழைத்து குடும்பத்திலேயே நல்லபெயர்எடுக்க வேண்டிய காலமும்  அதுதான். இதற்குள் நமக்கும் அலுப்பு தட்ட ஆரம்பிக்கும் சமயமும் உருவாகிறது. திருப்தி ஏற்படுகிறதா என்று நினைத்துப்பார்ப்பதற்கு கூட டயம் கிடைப்பதில்லை.

மனம், உடல் இரண்டும் ஒவ்வொன்றுக்கும் முரண்பாடான வேலைகளை செய்து பிடிவாதம் பிடிக்கிறது.  அந்த சமயமாகப்பார்த்து விவாகமான மகளையோ, மகனையோ, தனியாக பார்ப்பது மனதிற்கு மிகுந்த கிலேசத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இருசாராருக்குமே வீட்டு பெரியவர்களுடன்  ஒத்து வராது போல் தோன்றினால் , பெரியவர்கள் ஒதுங்கி  விடலாமே. அனாவசியமாக மணமுறிவுகள் வருவதையும் தடுக்கலாம் .

மேலும் நம் கலாசாரம் அக்கம் பக்கத்தாருடைய அபிப்ராயத்தையும் மதித்து வாழ்வதும்  பழகி விட்டதால், நாம் எதைப்பற்றியும் பேச இஷ்டமில்லாது போனாலும் யாரிடமாவது  பேசும்போது மனதுக்குள் லேசாகிவிட்டாற் போன்ற ஒரு எண்ணம் வரலாம் . இதைத்தான் இந்த நாட்களில் கவுன்சிலிங் என்று கூறுகிறார்கள். சாவு  என்பதை விட மகா பெரிய துக்கம்தான் உயிருடன் இருக்கும்போதே பிரிவது என்பது. அவரவர் அனுபவிக்கும் போதுதான்  அதன் உண்மை வலி  தெரியும். மனதறிந்து யாரிடமாவது பேசலாமே.

பெற்றவர்களுக்கு தன் பெண்ணை கணவனுடன் ,  ஆண் பிள்ளையை மருமகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்ப்பதில்தான்  பெருமை,  நிம்மதி ,சந்தோஷமும் கூட. இரு சாராருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, சுக துக்கங்களை பறிமாறிக்கொண்டு வாழ்வதில்தான் சிநேகம் வளர்கிறது. இருவருக்குமே விட்டுக்கொடுத்து வாழத்தெரியாவிடில், இயற்கை சீற்றம் ஏற்படுவதைப்போல், சூறாவளிக்காற்றில் பறந்து, வாழ்க்கையே அறுந்து போன, பட்டம் மாதிரி எங்கேயோ போய்மாட்டிக்கொண்டுவிடும்.

பழைய நாட்களில் கூட வீட்டுப்பெண் கணவனுடன் வாழாமல் வந்துவிட்டால் வாழாவெட்டி  என்று பெயர்சூட்டி சொல்வார்கள். மேலும் அந்தநாட்களில் பெண்களுக்கு படிப்பறிவு குறைவானதால் கூனி குறுகிக்கொண்டுதான்  வாழ்க்கையை நடத்தி வருவார்கள் .

பெண்கள் இப்போது ஆணுக்கு மேல் உயர்ந்து வளர்ந்து வருகிறார்கள்.  ஆனால் அந்த பெண்மையின் மென்மையான அடக்கம் இல்லை.  ஆண்மகனோ, ஒரு லெவலுக்கு மேல் யோசித்து  செயல் பட முடியாது  சரண் அடைகிறான், நடுவில் யார் கிடைத்தாலும். பெண்கள்  நான்கு திசையிலும் யோசிப்பார்கள்  என்பதில் சந்தேகமேயில்லை்.

அவனுக்கு பிள்ளைகள் இருந்தால் ஆண்மகனால், மனைவி பிரிந்து  விட்டால் பிள்ளை, குட்டியுடன் வாழ முடியுமா என்பது சந்தேகமே. ஆண்கள் எப்பேர்ப்பட்ட சூரப்புலியாக இருந்தாலும், பிள்ளைகளுக்கு தேவையானவற்றை , மனதளவில் அளித்து வளர்த்து விட முடியாமல்  தவிர்ப்பார்கள்.  பெண்ணோ எவர்துணையுமே இல்லாமலிருக்க துணிந்தும் விட்டதாக தோன்றுகிறது, காலம் போகும் போக்கை பார்த்தால், ‘விநாச காலே விபரீத புத்தி’ என்பார்கள்.  அதேதான்  எங்கே  திரும்பினாலும் தெரிகின்றது , இப்போது.