காலம் மாறவில்லை , காலத்தை நாம்தான் மாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதில் சந்தேகமேயில்லை. சுமார்  50 வருடங்கள் முன்பு தன்னுடைய பிள்ளைகள், எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்றே அப்பாக்களுக்கு தெரியாது. ஏதேனும் உயர்வான படிப்பையும் பற்றி பிள்ளைகளிடம் பேச ஆரம்பித்தாலும் பிள்ளைகள் பிடி கொடுத்து பதில் கூற யோசிப்பார்கள். இந்த நாட்களில் பிள்ளை படிக்கிறானோ மாட்டானோ, அவர்களுக்காக  பெற்றோர்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமில்லை. ஆனால் இன்றைய நிலை  அப்படியில்லை. பிள்ளைகள்  மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகிறது என்பதை நோட்டம் விட்டுத்தான் அப்பாக்கள்  பிள்ளைகளிடம் பேச  ஆரம்பிக்கிறார்கள். காரணம் பிள்ளைகள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற யோசனையில் பிள்ளைகளிடம் பேசவே தயக்கமேற்படுகிறது.

இன்றைய பெற்றோர்கள் தான் பெற்று வளர்த்த பிள்ளைகளிடமே,  கல,கலப்பாக பேசி மகிழ யோசிக்கிறார்கள். மாடர்ன் பிள்ளைகளுக்கு பழைய காலத்தை பற்றிய பேச்சுக்களில் நம்பிக்கையில்லாத காரணத்தால் மட்டுமே கேட்க பிடிப்பதில்லை. எதுவுமே ஒரே நாளில் வளர்வதும் இல்லை ,அழிவதும் இல்லை. பிள்ளைகளுக்கும் தன் முன்னோர்களைப்பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாது இருந்தால், தான் , யார் என்பதே தெரியாமல் போய்விடும். யாவருக்குமே  தன்னுடைய ஆணிவேராகிய தன் குலாசாரங்களை அறிந்து கொள்வது மிகவும் அத்யாவசியமானது. பெற்றோர்களும் தங்கள் பூர்வ குடும்பங்களை பற்றிய விபரங்களை பிள்ளைகளிடம் அடிக்கடி பேசி வரவேண்டும். யாவருமே பணம் சம்பாதிப்பதற்குத்தான் முக்யத்வம் தருவது போல் தோன்றினாலும், எல்லோருக்குமே தன்னுடைய மனதை திறந்து கொட்டவும் ஆட்கள் தேவையாக உள்ளது.

பணத்தில் மிதந்திருந்தாலும் சரி, பரதேசியாக திரிந்திருந்தாலும் சரி, ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய சுய சரித்திரம் இருந்திருக்கும். அவை சாதாரணமாகவும் இருந்திருக்கலாம், அசாதாரணமாகவும் இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவனுடைய சுய சரித்திரம் மிகவும் முக்யமே . குடும்பங்கள் கலைந்து விடாமல் காப்பாற்றப்படவேண்டும்.