இன்றைய நாட்களில் சத்தங்கள்  மிகவும் அதிகமாகிவிட்டது. வீட்டில் டீ.வி, ஏ.ஸி , குக்கர் சத்தம், டெலிபோன் மணி , காலிங் பெல் சத்தம் என வித,விதமான சத்தங்களை கேட்டு,கேட்டு  மனம் நொந்து போய் விட்டது.     வீட்டுக்கு வெளியில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர பெரிய வண்டிகளினாலும்  உண்டாகும் சத்தங்களினால்  யாவருக்குமே காது அரைகுறையாகத்தான் கேட்கிறது.  பிறந்த பிள்ளையிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை. இந்த வருட கடைசியிலிருந்து  வீட்டருகில் மெட்ரோ ரயில் ஓடப்போகிறது .

இந்த சத்தங்களைத்தவிர, வீட்டுக்கு வீடு சண்டை ,கூச்சல் என்பதும் இருக்கின்றது.  இந்த மாதிரி  ஏகப்பட்ட சத்தங்கள் அதிக அளவில் காதில் விழுவதால் , மனிதர்களுக்கு எதற்கெல்லாம் கோபம் வருகிறது என்றே புரியாமல் ஒருவர்மீது ஒருவர் குற்றங்கள் கூறி  தகராறுவருகிறது.                                                                                                       இதை தவிர ஏர்ப்போர்ட் அருகில் வாழ்ந்தால் ஏரோப்ளேனின் சத்தமும் சேர்ந்து கொண்டு விடும்.  எதை குறைகூறலாம் என காத்திருந்து வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டை.

இதிலிருந்து தப்பிக்க வேறு  வழியேயில்லையென்றுதான் தோன்றுகிறது.எந்தமனிதனுமே இந்த மாதிரி ஒரு இக்கட்டான நிலைமையை எதிர்பார்க்கவேயில்லை, போலும். எதை வாங்காமல் இருக்கலாம், எதை வாங்கிவைத்துக்கொள்ளலாம், என்பதும் புரிபடவில்லை. அடுத்த தலைமுறை  பிள்ளைகள் பெரிய ஊர்களில் வசிக்கும் வாழ்க்கையையே துறந்து விடுவார்கள் என்று நினைக்க வைக்கிறது. வருங்காலத்தில்  மகாபாவம் செய்தவர்கள்தான்  பெரிய நகரங்களில்  வாழப்போகிறார்கள்.

பத்து வருடங்கள் முன்பு கூட சாமான்ய  சிட்டுக்குருவி சதா ஜன்னலில் வந்து உட்கார்ந்து சிக், சிக் என்று  சத்தம் போடும் . மோபைல் டவர்கள்  அதிகமானதால் சிட்டுக்குருவிகளை காண்பதே கிடையாது. பறவைகளே  ஊமையாகிவிட்டதைப் போல் ஒரு தோற்றம் காணப்படுகிறது.  தெரு நாய்களும் குறைந்து விட்டதால் தெரு நாய்களின் குரைப்பை கேட்க கூட  காசு கொடுத்து கேட்கவேண்டியதுதான்.