பூஜ்யஶ்ரீ சரஸ்வதி, சாம்பசிவனுக்கு பெண்வழிப்பேத்தியாக பள்ளிவிருத்தியில் பிறந்து, சித்தமல்லி வெங்கட்ராமனுக்கு பிள்ளை வழிப்பேத்தியாகவும், செல்லம், நாகபூஷணத்திற்கு இரண்டாவது ரத்தினமாகப் பிறந்தாயேடி,சாரதாம்பா, நீ  இன்று சுமங்கலிப் தெய்வமாகி விட்டாய். என் நமஸ்காரங்கள் உனக்கு…

கேட்டையில் பிறந்து, கோட்டை போன்ற குடும்பத்தை  ஆளப்பிறந்தாயோடி சாரதாம்பா.  உனக்கு, நீ பிறந்ததும் புகுந்ததும் சரி சமானமாக அமைந்ததே, அந்த குடும்பங்களை நினைத்துப்பார்க்கிறேன். சாரதாம்பா, கேட்டையில் பிறந்து கோட்டையை ஆண்ட உன்னை கொஞ்ச காலம் கட்டைபோல் கிடத்தி, ஆண்டவன் வேடிக்கை பார்த்தானே, ஏன், அதையும் நினைத்துப்பார்க்கிறேன், சாரதாம்பா.

ஒரு சமயம் இந்தியமண்ணில் நீ தங்கியிருந்தால், அந்நிய கைகள் உன்னை தூக்கி விடுமோ என்று நினைத்து, பத்தினிப்பெண்ணான உன்னை, உன் பதியைத் தவிர, வேறு யாரும் உன்னை தொடக்கூடாது என்று எண்ணி, உன்னுடைய கடைசி நாளை அந்நிய மண்ணில் கொண்டு சேர்த்தானோ, சாரதாம்பா. எனக்கு எதுவும் புரியவில்லைடி.

உனக்கு ஆண்டவன் தந்த மணிகளுக்கு நிகராக அமைந்த முத்துக்களை, சாரதாம்பாள் என்கிற நூலில் கோர்த்து அமைத்தானே ஒரு மாலையை, சாரதாம்பா, அமர்க்களம்தான்டிம்மா. சாரதாம்பா, உன்னை வழியனுப்ப சக உதிரத்திற்க்கு ஒன்றாக வந்து சேரும்படி அமைத்துக்கொண்டாயேடிம்மா, நீ கெட்டிக்காரிதான்டிம்மா. சாரதாம்பா, சோகத்தில் புத்திரசோகம்தான் கொடியது என்று கூறுவார்கள், ஆனால் பத்தினி சோகமும் மகா கொடுமையானதுதான் என்பதில் சந்தேகமேயில்லை.

சாரதாம்பா, உன்னை கட்டையாகப்போட்டு யாரை பழி வாங்கினான்? உன்னை மௌன உலகில் ஆழ்த்தி யாருக்கு புத்தி சொல்கிறான்?

சாரதாம்பா, ஆபத்சன்யாசம் என்று கேட்டிருக்கிறேன், ஆனால் நீயோ ஆத்மசன்யாசம் அல்லவா வாங்கிக்கொண்டு விட்டாய்! எதற்காக? புரியவில்லையே?

நம் அப்பா கூப்பிட்ட ஜாலக், நீ மாயா ஜாலம் பண்ணி மறைந்து விட்டாயே.

நீ எப்படி ஆடம்பரமேயில்லாத வாழ்க்கை வாழ்ந்து, வழி காட்டினாயோ, அதே வழியில், சகோதரிகளையும், சுமங்கலிகளாக அழைத்துக்கொள்வாயா?

கேட்டை நட்சத்திரத்தன்று சாரதாம்பா என்று கூவிக்கொண்டு, உன்னைப்பார்ப்பேன், ஆகாயத்தில்!