ஊறுகாய் போடுவது என்பது,  வயதானவர்கள்தான் செய்ய முடியும் என்று நம்மில் பலபேர்  நினைக்கிறோம்.  அது  நிஜமுள்ளதாகவும் இருக்கலாம். நம்மில் நிறைய பேர்களுக்கு ஊறுகாய் போடுவது என்றால் ப்ரம்ம ப்ரயத்தனம்தான். சரியாக அமைந்து விட்டால் தானாகவே வந்து விட்டது என்றும் நம்வீட்டுக்கார ஆண்களே கலாட்டா செய்து விடுவார்கள்,   கரெக்டாக  வராவிடில்  உன்  வேலையே இப்படித்தான் என்றும் முடிவு கட்டி,  யார் வீட்டிற்கு நாம்போனாலும்சரி,  நம் வீட்டிற்கு  யார்  வந்தாலும் சரி,  இந்த ஊறுகாய்தான் டாபிக் ஆக இருக்கும், அந்தநாட்களில்.

எனக்கு என் கோபக்கார கணவனின் மனதை எப்படி ஆகர்ஷிக்க வேண்டுமென்று, தெரியாத நாட்களில்  நடந்த இந்த சம்பவத்தை நினைத்து,  நினைத்துப்பார்த்துக்கொள்வேன்.

கல்யாணமான புதிதில் ஒரு வருடத்தில் எனக்குப்பிறகு  குடியேறிய குடும்பம்  ஒன்று எனக்கு அறிமுகமானதில், அவர்களின் இரண்டு பிள்ளைகளுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுக்க டீச்சர்  தேடியதும்,  நான் கற்றுக்கொடுக்க முடியும், என்றதினால் ஆரம்பித்த சிநேகம், 3,4 மாதங்களில்  நான் அவர்களிடம் மாங்காய்த்தொக்கு  பண்ண கற்றுத்தர முடியுமா என்று நான்கேட்டு,   எனக்கு அவர்கள் கற்றுக்கொடுத்தது,   என் ஆயுளில் மறக்க முடியாத ஒரு நினைவாகிவிட்டது. மாங்காய்த்தொக்கை செய்து என்கணவரை ஆகர்ஷித்தேனோ இல்லையோ, என் மனதில் ஒரு பெரிய  மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்பதில் சந்தேகமேயில்லை.

மாங்காய் வாங்கி , அதற்கு வேண்டிய சாமான்களையும் வாங்கியது கூட இன்று வரை மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அன்றிருந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. 55 வருடங்கள்ஒடி விட்டன. ஆனாலும் நினைவு பசுமையாக  இருக்கிறது.

55 வருடங்கள் ஓடி விட்டன.  நல்ல மாங்காய்த்தொக்கு செய்து கொடுத்து , கடைசியாக ஒருகரண்டி தண்ணீரை விட்டு பாட்டிலில் மூடி வைத்து விட சொல்லி, நானும் அவர் சொன்னபடியே செய்து விட்டேன்,  ஏனென்றால், எனக்கு எதுவுமே தெரியாதே!  மாங்காய்த்தொக்கு செய்து மனதை வென்று விட  நினைத்த எனக்கு சரியான அடி என் மனதில் விழுந்தது. மறுநாள் காலை கணவர் ஆபீஸ் கிளம்புமுன் தயிர்சாதம் கலந்து, ரொம்ப கர்வமாக எதிரில் நின்று கொண்டு மாங்காய்த்தொக்கு பாட்டிலின்,  மூடியை திறந்ததும் குபு, குபுவென்று நுரையுடன் பொங்கிவழிந்ததும்,  என்  கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வந்தது. அவருக்குப்பிடித்த  ஊறுகாய் போட்டதற்காக  எப்படி குஷியாக இருப்பார் என நான் அவருடைய முகத்தைபார்ப்பதற்காகவே அவருக்கு எதிரில் நின்றுகொண்டிருந்தது கூட எனக்கு இன்றும்நினைவில் உள்ளது.   அவரோ முகம் சுண்டிப்போய் உன்னை அசடு, என நினைத்து ஏமாற்றி விட்டார்கள் என்று சொன்னதும் இன்று வரை என் காதில்ஒலிக்கிறது. என்ன தப்பாயிற்று என்று தெரியாமலே,  என்ன அழுகை என்றதும் ரோசம் வந்து என் அழுகை நின்றது.  துக்கம் தொண்டையை அடைக்கிறது. எனக்கு பதில் பேசவும் முடியவில்லை.

அன்று மாலை ஊறுகாய் குரு வரும் வரை நான் காத்திருந்தது , அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். மாலையும் வந்தது, குருவும் வந்தாள்- ஊறுகாய் நிலையை சொன்னதும்,  வாழ்க்கையில் எதை  செய்யக்கூடாது  என்பதை தெரிந்து கொள்வதும் முக்கியமான விஷயம் என்று கூறி  விடை பெற்றுக்கொண்டாள்.  உன் ஆயுள் உள்ளமட்டும்,, ஊறுகாயில் தண்ணீர்  ஊற்றவே கூடாது என்று   நினைவில் வைத்திருப்பாய் அல்லவா என்று கூறிவிட்டும் கிளம்பி சென்றார். பதில் பேச துப்பில்லாமல் சிலைபோல ஆகி உட்கார்ந்திருந்து உறுதி மொழி எடுத்துக்கொண்டேன் ,  என் ஆயுளில் நான் யாருக்குமே இந்த மாதிரியான பாடம் கற்பிக்க மாட்டேன் என்று!!  இன்றைக்கும்கூட, நான் ஊறுகாய் எடுக்கும் போது ஸ்பூன்  ஈரமில்லாமலிருக்கிறதா என்று அவசரமாக நிச்சயம் செய்து கொள்கிறேன்!!