இந்த நாட்களில் கம்ப்யூட்டர், இன்டர்நெட், செல்போன் இவைகள் ஓடும் வேகத்தை பார்த்தால், நாரதர் கைலாசம் போனதும், ஆண்டாளைப்பார்க்க நாராயணன் பூலோகம் வந்ததும், காற்றுவேகம், மனோவேகமாக ஹனுமான் லங்காவில் பிரவேசித்ததும், உண்மையாகவே தோன்றுகிறது. இன்றைய நாட்களில் ஆளுக்கு ஆள், கைக்குள் செல்போன், ஐபாடில் எங்கே வேண்டுமானாலும் பேசலாம், எங்கே வேண்டுமானாலும் உத்யோகம் பார்க்கலாம், இந்த நிலையில் உலகத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போடும் இந்த தலைமுறையினரை பார்த்தால், மந்திரவாதிகள் மாயாஜால வித்தைகளை காட்டுவது போல தெரிகிறது. ஸ்கைப் என்றதொரு வினோதமாக ஆனால் உண்மையாக ஒரு வசதி உள்ளதே, அது எப்பேற்பட்ட சாதனை. உண்மையாக சொல்ல வேண்டுமானால் ஆண்டவனே வெட்கப்படவேண்டிய விஷயமாகத்தான் இருக்கிறது !!
நான் திரும்பிப்பார்க்கிறேன், சில வருடங்கள் முன்னால் இருந்த நிலையை, ஒரு டெலிபோன் பண்ண வேண்டுமானால், யார் வீட்டில்போன் இருக்கிறதோ, அவர்களின் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு செயற்கை புன்னகையுடன் ஒரு போன் கால் செய்யவேண்டும் என்று உடம்பை கூனிக்குறுக்கிக்கொண்டு கேட்போம். மன்னிக்கவும், பத்து நிமிடங்கள் கழித்து வாங்களேன் என்பார்கள். மனதுக்குள் கோபம் கூத்தாடும், ஆனாலும், ஓ, அதனால் என்ன வருகிறேனே என்று பவ்யமாக அவர்களிடம் கூறி, மனதுக்குள் இயலாமையை சபித்துக்கொண்டு திரும்பி போவோம்.
என் தம்பி 1970 யில் வெளிநாட்டில் படிக்கப்போயிருந்தபோது, என்னுடைய பெற்றோர் அவனிடம் பேசுவதற்காக கிராமத்திலிருந்து மதராஸ் வருவார்கள். அன்றைக்கென்று இரண்டு, மூன்று மணி நேரம் போன் கிடைக்காது. இரவு 11 மணிதான் கடைசி டயம். அதன்பின் என் தம்பியும் போன் செய்து தொந்திரவு செய்யக்கூடாது என்று நினைத்து முயற்சிக்கமாட்டான், என்பதும் அவர்களுக்கும் தெரியும். இவனுடன் பேச 15 நாட்கள் முன்பே தேதி, டயம் எழுதியிருப்பான். பெற்றோர் காத்திருந்து தவமிருப்பார்கள். போனுக்காக தவமிருக்கும்போது அந்த வீட்டுக்கார மாமா மாமியிடமும் ஏதாவது அவர்களுடன் பேச்சுக்கொடுத்து அவர்களையும், தூங்கவிடாமல் கழுத்தை அறுப்பார்களாம்.
இப்படி ஒருபோன்காலுக்காக இவ்வாறு சந்தி சிரித்தது போக, இப்போது திரும்பும் திசையெல்லாம் போன், குலுக்கப்போகும் கைகளிலெல்லாம் போன், 4 வயதுப்பபிள்ளைகளுக்கு தெரியாதவிபரங்கள் கிடையாது, செல் போன்களைப்பற்றி.95 வயது தாத்தா கூட காதில் போட்டுக்கொண்டு, பாட்டு கேட்பதும், வம்புகளை பேசி அனுபவித்துக் கொண்டுமிருக்கிறார்கள்.
உலகம் தலைகீழாக மாறி வருகிறது.செத்த உடலுக்கு உயிரூட்ட முடியவில்லையே தவிர, நவீன சாதனங்களுக்கு என்ன குறை? குதிரைக்கு கூட கொம்பு முளைக்க செய்து விடுவார்கள் போலிருக்கிறது!
அந்த நாளை நினைத்துப்பாருங்கள், எந்த நாளில் ஸ்விட்சை தட்டியதும் பல்ப் எரிந்தது, நெருப்புப்பொறியில் காஸ்அடுப்பு, இப்படியாக எத்தனையோ சாதனங்கள் வீட்டுக்குள்ளே!! ஆனால் நவீன உலகம் போகும் வேகத்தைப் பார்த்தால் தலையை சுற்றுகிறது, உலகம் சுற்றுவதை காட்டிலும் வேகமாக சுற்றுகிறதே!!!
சில வருடங்கள் முன்பு,அம்மை நோயால் பீடித்தவர்களை,மருத்துவரிடமே காண்பிக்காமல் தானாகவே சரியாகி விடும் என்றும்,அம்மைக்கு கோபம் வந்துவிடும் என்றெல்லாம் கதை கட்டி நிறைய மனிதர்களை சாகடித்தும் இருக்கிறார்கள், அறியாமையினால். இனி வரும் நாட்களில் பிள்ளைகளுக்கு பேசவோ, அட்வைஸ் கேட்கவோ பெற்றோர்களும் அவசியமின்றி போய்விடும் போல்தோன்றுகிறது. Google லில் எதைக்கேட்டாலும் பதில் கிடைத்து விடுகிறதே!!
சந்திரனில் மனிதன் காலடி வைத்து விட்டபோது அந்த சமயம் 75 வயதான என்பாட்டி சொன்னது எனக்கு இன்னம் ஞாபகம் இருக்கிறது, சந்திரனில்மனிதனின் காலடி பட்டு விட்டது. சந்திரா,சூர்யா என்றுதான்நாங்கள் மரியாதையாகச்சொல்வோம் ஆனால் மனிதன் சந்திரமண்டலத்திற்கே போய்விட்டபடியால் இனிமேல் அவர்களுக்கு மரியாதை,எதற்கு என்று வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது எனக்கு.
வாழ்க MARK ZUCKERBERG!! வளர்க Internet!!
Yes, true. It is unimaginable that data can be stored in clouds. More developments are yet to come into this world… Let’s wait and watch…….