பாதரஸமே! நீ என்னுடைய அக்காதானே. ஆனால் நீ எனக்கு அக்கா மாதிரி இருந்ததே இல்லையே. அம்மாவாகவும், சிநேகிதியாக , வழிகாட்டியாகவும்தான் இருந்து மறைந்தாய்! நீ பிறந்தாய், நம் குடும்பத்தில் முதல் பெண்குழந்தையான உனக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள், நீ எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு? உன்னைப் பற்றிய நினைவுகள் ஏராளம். எதை எழுத,எதை விட வேண்டும் என்றே புரியவில்லை எனக்கு! உன்னைப்போல் கெட்டிக்காரி இல்லையா அல்லது உன்னைப் போல பலவீனமானவர்களே இல்லையா, இல்லை , உன்னைப்போல் பலம் பொருந்தியவர்கள் இல்லையா என்று தீர்மானிக்க முடியாமல் வாழ்ந்தும் ,மறைந்தும் விட்டாய் , என்பதுதான் நிஜமான உண்மை. உன்னைப்போல் பொறுமைசாலி நீயேதான், உன்னைப்போல் பலசாலியும் நீயேதான், பலவீனமாகவே இருந்தவள் போல் நடித்ததும் நீயேதான். அதனால் உன்னை பாதரஸமாக வர்ணிக்கிறேன். உன்னை எத்தனை உடைக்கப்பார்த்தும் நீ உடைய வில்லையே, நிதானமாக சக்தியை திரட்டிக்கொண்டு நின்று எதிர்கொண்டதும் நீயேதான். உன் கஷ்டங்களுக்கு நீ வடிகால் தேடி அலையவில்லை, யாரையும் குற்றம் கூறி உன் தாபத்தை தள்ளப்பார்க்கவில்லை. தாங்கிக்கொண்டு தழைத்து நின்று பாறாங்கல் மாதிரி எதிர்கொண்டாய்.
அக்கா , நீ பாதரஸமாக வாழ்ந்திருக்கிறாய். உன்னை யாராலுமே சரியாக புரிந்து கொள்ள முடியாதபடி வாழ்ந்து மறைந்து விட்டாய் நீ! பாதரஸத்தை கொட்டிவிட்டால் அள்ள முடியாது, திரட்டி, திரட்டி தான் ,ஒன்று சேர்த்து குவிக்க வேண்டும்.
எதற்குமே கலங்காத, எதிலுமே கலக்காத பாதரஸமே, நீயும்வளர்ந்து, வளர்த்தும் விட்டு கையை ஆட்டி பை,பை சொல்லிவிட்டு உன்ஆத்மாவை பிரித்துக்கொண்டுவிட்டாய். உன்னை- பாதரஸத்தை பிடித்து வைத்துக்கொள்ளமுடியாது என்பதையும் காண்பித்து விட்டாய் . உன்னைப்பற்றி நினைத்துப்பார்க்கும் போது நீ கல்நெஞ்சுக்காரியோ என்றும்தோன்றுகிறது, எப்படி உனக்கு காரிய காரியங்களை சாதித்துக்கொண்டாயோ அதேபோலவே சாவிலும் தனக்கென்று ஒரு ஸ்டைலில் கிளம்பி விட்டாயே! நீ வளர்ந்த வாழ்வை விட, நீ இந்த உலகத்தை விட்டு கிளம்பியதை எப்படி விஸ்தரிப்பது என்று மனம் தடுமாறுகிறது. சுற்றியுள்ளோரை ஏப்ரல் முட்டாள்கள் என்று காண்பிக்க மார்ச் 31ம் தேதியை தேர்ந்து எடுத்துக்கொண்டு கிளம்பி போனாயா? மனிதர்கள் மறைந்த பின்பு அவர்கள் வாழ்ந்த காலத்தை பற்றி திரும்ப,திரும்ப படிப்பார்கள். நீ கிளம்பிய தோரணையை பற்றி நினைத்து, நினைத்து என் மனம் நிறைவு பெறுகிறது.
Unbelievable piece of writing! Touches one’s soul! Thanks for writing!
Shyama , Thank you so much for the comment on Naga perimma’s blog.