பல வருடங்களுக்கு முன்பு, நான் ஒருநாள் தெருவில் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு அற்புதமான  சிநேகிதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு, அவளுடைய சரித்திரம்தான் இது. அவளுக்கு தன் பெற்றோரின் முகம் கூட தெரியாது. அவள் பிறந்த பத்துமாதங்களுக்குள், அவளுடைய பெற்றோர்கள், கொடுமையான வியாதியில் ஒருவர் பின் ஒருவராக நான்கு நாட்களுக்குள் காலமாகி விட்டதால், அந்திம கடன்களை முடித்த, அவளுடைய  உறவினர் ஒருவர் அவளை எடுத்து வளர்க்க ஆரம்பித்து, பள்ளிப்படிப்பை முடிக்க வைத்து, டைப், ஷார்ட்ஹான்டும் படிக்க வைத்திருக்கிறார்கள். இந்நாளில் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதுமாதிரி அந்த நாளில் டைப், ஷார்ட்ஹான்டு கற்றுக்கொண்டால் உடனடியாக வேலை கிடைத்துவிடும்!  மேற்கொண்டு என்ன வழியில் ஈடுபட வைக்கலாம் என்று யோசிக்கும் சமயமாகப் பார்த்து,  ஒரு உறவினர் குடும்பம் இவளை பராமரித்து வந்தவர்களிடம் வந்து பேசிக்கொண்டிருந்த போது,  நான் தற்போது இருக்குமிடத்தில் உனக்கு நல்லவேலை கிடைக்குமென்று உறுதியாக சொன்னபடியால்,  அன்று வரை அந்த கிராமத்தை விட்டே தாண்டாமலிருந்த அவளுக்கும் அந்த ஊரை விட்டு கிளம்பி விடலாம் என்று எண்ணம் வந்துவிட்டதோ என்னவோ,  அவர்களுடன் அவளும் கிளம்ப தயாராகி,  இதுநாள் வரை அவளை வளர்த்தவர்களுக்கு டா,டா கூறி விட்டுக்கிளம்பி விட்டாள். வேலை பார்த்து சம்பாதிக்கும்  சக்தியுள்ளவளாகி விட்டபடியினாலும், பறவைகள் இறக்கை முளைத்து பறக்கும் திறமை வந்தவுடன் கூட்டை விட்டு பறந்து விடுவது போல,  கிளம்பி விட்டாள். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்களே,  அதுபோல! வேலையில் சேர்ந்த பின்பும் தன்னைக்காப்பாற்றியவர்களை அடிக்கடி நினைத்துக்கொள்வாளாம். என்னிடமும் கூறியவைகளின் எதிரொலிதான் இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் கதை!  அனாதைக்கு தெய்வமே துணையாக நிற்கும் சமயத்தில் அவளை யார் கலங்க வைக்க முடியும்!!

பெரிய நகரத்திற்கு வந்தவுடன் எத்தனை இன்னல்களை சந்தித்திருப்பாள்? அங்கே போன பின்தான் தெரிந்திருக்கிறது  அழைத்துவந்தவரின்  மனைவிக்கு உடல் கோளாறு என்று. என் சிநேகிதிக்கும் தன் கதியைப்பற்றி எப்படி,  என்னவென்று  நினைத்துப்பார்த்திருப்பாள்,  அவளுக்குமே புரியாத ஒரு சக்திதான் அவளை ஒரு நல்ல குடும்பத்தில் சேர்த்திருக்கிறது. அவளை இது நாள்வரை காப்பாற்றியவருக்கும்,  வேறு எந்தவிதமான கெட்டஎண்ணத்திலும் அவளைக்கூப்பிடவில்லை என்று என் சிநேகிதியை எடுத்து வளர்த்தவர்களுக்கு எப்படி புரிந்திருக்கும்?  இதைத்தான் தெய்வபலம் என்பார்களோ?

புதிய இடம், புதிய மனிதர்கள்,  வேறுமாதிரியான வீட்டுவேலைகள்,  இவர்கள் தொழிலுக்கேற்றாற்  போல பழக்க வழக்கங்கள்,  எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தும்,  எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில், தான் எடுத்த முடிவை தானாகவேதான் சமாளிக்க வேண்டும் என்ற அவளுடைய மனோ தைரியத்தையும்,  அவளுடைய மனதை திறந்து பேச யார் இருந்தார்கள்,  மேலும் எவரிடமும் வெறுப்பும் கொள்ளாமல் இருக்க அவளுக்கு யார் கற்றுக்கொடுத்தார்கள்?  இந்த கேள்விகளை  கடந்த  45 வருட காலத்தில் எனக்குள் எத்தனை முறை கேட்டுக்கொண்டிருப்பேனோ எனக்கே தெரியாது.
இதற்கு நடுவில் அவள் தங்கியிருந்த வீட்டில்  யாரோ ஒரு பையன் கல்யாணவயதில் இருப்பதாகவும், தனக்கு ஏற்ற பெண்,  உத்யோகம் பார்த்து சம்பாதிக்கும் யோக்யதையிருந்தாலே போதுமானது என்று பேசுவது என் சிநேகிதியின் காதிலும் கேட்டதால்,  எனக்காக பேசுங்களேன் என்று தானாகவே முன்வந்து உறவினரிடம் கூறி  அவளுடைய பெயருக்கேற்றாற் போலவே அந்த பையனுடைய பெயரும் அமைந்ததும்,  தெய்வீகமானதுதான் என்றும் வியப்புற்று இன்றும்கூட மகிழ்ச்சி அடைகிறேன்.  கல்யாணமும் நன்றாக அமைந்து  நான்கு குழந்தைகளையும்,  பெற்றெடுத்து வளர்த்து,  அவரவர் திறமைக்கு ஏற்றாற்போல் படிக்கவைத்து,  அவரவருக்கு தக்கமாதிரி வாழ்க்கை அமைந்துள்ளது. வாழ்க்கையில் எத்தனையோ  இன்னல்களை பார்த்து அனுபவித்தவளை நான்  என் ஆயுளில் மறக்க முடியாத முன்னோடியாகத்தான் எப்போதுமே நினைப்பேன்.
நாங்கள் பிரிந்து 25 வருடமாகியுள்ளன, ஆனாலும் இன்று பேசிக்கொண்டாலும், நேற்று பேசிக் கொண்டிருக்கும் பேச்சை தொடர்வது போல்தான் இருக்கும். இப்படியொரு குடும்பத்தோடு சிநேகிதம் கிடைப்பதே அபூர்வம்தான்!!