எங்கள் வீட்டில் லோகுவிற்கு இருந்த அதிகாரம் இன்னொருவருக்கு , அதாவது வீட்டிலுள்ள மற்ற ஆட்களுக்கு இருந்ததில்லை என்பது உண்மையே. வீட்டில் ரொம்ப வருடங்களுக்கு பிள்ளை குட்டிகளே இல்லாமலிருந்து பிள்ளைகள் பிறந்தால் எத்தனை ரகளை ஆகுமோ அத்தனை அமர்க்களம், வீட்டில் லோகு வந்த பிறகு. வீடு இரண்டு படும், பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்பியவுடன், நான்தான் வாக்கிங் அழைத்துப்போவேன், நான் காலையில் வாக்கிங் அழைத்துப்போகவில்லை, என்னுடைய சான்ஸ் கிடைக்கவேயில்லை என்று ஒரு நாளைக்கு நாய், எத்தனை முறைகள் வெளியில் போகுமோ அத்தனை முறைகள் நம் வீட்டினுள்ளே உள்வீட்டு கலகம் ஏற்பட்டு அமளி படும்.
என் இரண்டாவது பெண்ணுக்கு மிருகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை என்னால் எழுத்தில் காட்ட முடியாது, அந்த அளவுக்கு பிரேமை. நான் ஊரில் இல்லாத சமயத்தில் எங்கள் குடும்ப நண்பர் வீட்டில் அவர்கள் வீட்டு நாய் குட்டி போட்ட செய்தி கேட்டு, தனக்காக ஒரு குட்டியை கொடுக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறாள். அவர்களும் பத்து நாட்களில் தருவதாக கூறி நாய்க்குட்டியும் வீட்டுக்கு வந்தாகிவிட்டது. அதை எப்படி வளர்க்கவேண்டும் என்பதற்காக ஒரு புத்தகத்தை வாங்கி படிப்படியாக கற்றுக்கொள்ள ஆரம்பித்த சமயம், நான் வந்து சேர்த்தேன். கட்டிலுக்கு அடியிலிருந்து லேசாக அழுக்கடைந்த பஞ்சுப்பொதிமாதிரி ஏதோ ஒன்று நகர்ந்து வந்தது. எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
எனக்கோ நாய் கடித்து பரிதாபமாக உயிரிழந்தவர்களை பார்த்திருந்ததால் நாய் என்றாலே ஓடி ஒளிவேன். என் கணவருக்கு நாய் என்றாலே பிடிக்காது என்று சொன்னாரே தவிர, நாய்க்குட்டி தன் வீட்டிற்கு வந்தவுடன் மிகவும் பிடித்து விட்டது. அவனுக்கு வெளியில் போக வேண்டுமென்றால்தான் எங்கள் காலடியில் வந்து சுற்றி, சுற்றி வருவான். இல்லையேல் வா, வெளியே போய் வரலாம் என்றால் உறுமுவான் , படுத்துக்கொண்டிருந்த இடத்திலிருந்தே.
லோகு எங்கள் வீட்டிற்கு வந்த பின் தன்னையே வீட்டு எஜமான் என்று நினைத்துக் கொண்டு விட்டது போல் நடந்து கொள்வான். ஒரு பதினான்கு வருடங்கள் எங்கள் வீட்டில் அதிரடி வாழ்க்கையை மேற்கொண்டு அதிகாரமாக வாழ்ந்தான்.
எந்த பழகிய மனிதர்கள் ஆனாலும் , எந்த சமயத்தில் யாரை அவன் தன்னுடையவராக நினைக்கிறானோ அவர்களைத்தான் அவன்பயமுறுத்தமாட்டான். அவனுக்கு வாக்கிங் போக வேண்டுமென நினைத்தால் மட்டுமே அவனுடைய கழுத்தில் நம்மால் பெல்ட் போடமுடியும். இல்லாவிடில் பயங்கரமாக உறுமி பயமுறுத்துவான். நாம் கேட்கவில்லையானால் கடித்தும் விடுவான். அவனுக்கு தமிழ்,இங்கிலீஷ்,ஹிந்தி மூன்று பாஷைகள்புரியும். லோகுவின் வாழ்நாளில் அவனைப்பற்றி தெரிந்தவர்கள் பீதியுடன்தான்,இருப்பார்கள். அவன் மூடு மாறும் சமயம் அவனுடைய முகம் மாறி ரௌத்ராகாரமாகி விடுவதையும் காணலாம். நாங்கள் சின்ன பிள்ளைகளாக வளரும் பருவத்தில் எங்கள் வீட்டிலும் ப்ளாக்கி என்றொரு நாய் இருந்தது. அது மிகவும் சாது நாய். ஆனால் லோகுவின் முகம், வேறுமாதிரியான நடைஎல்லாம் வித்யாசமாகவே இருந்ததுடன், மூடியாகவும் இருப்பான். கல்லுக்குள் ஈரம் இருக்கும் எனக்கேட்டிருக்கிறோம், அதே போல நெஞ்சில் திரவமே இருக்காது என்பதும் கேட்டு இருக்கிறோம். எங்கள் லோகுஇரண்டு ரகங்களையும் கொண்டிருந்தான். அவன் மூட் எப்படி மாறும்,யாரிடம் எப்படி இருப்பான் என்றே கணிக்க முடியாத பிறவி அவன்.
எனக்கு என் மகளின் குழந்தைப்பேறுக்காக தூரதேசத்திற்கு நான் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நான் அவனை நினைத்து கவலைப்பட்டேன். யாரிடமும் ஒத்துவராத நாயாக இருக்கிறானே , அவனை யார் கவனிப்பார்கள் , என்றெண்ணி மனது வேதனைப்பட்டது. மறுநாள் விடிகாலை நான் பை,பை கூறி விட்டு , நீ நான்கு மாதம் யார் சாப்பாடு போட்டாலும் சாப்பிட்டு நல்ல நாயாக இரு என்று கூறினேன் . என்ன புரிந்ததோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
மறுநாள் காலையிலேயே அவன் ஆண்டவனிடம் அடைக்கலமாக விட்டான். என் கணவர் காலையில் காபி போட கிச்சனுக்கு போகும்போது தூங்குவது போல் கிடந்திருக்கிறான். காபியை எடுத்துக்கொண்டு வந்து கூப்பிட்ட பிறகும் அவன் அசையவேயில்லை என்றதும் சந்தேகமாகி தண்ணீர் தெளித்தும் எழுந்திருக்கவில்லை என்றதும்தான் சந்தேகமாகி புரட்டி போட்டும் எழுந்திருக்கவில்லை . தனக்கு உணவே கிடைக்காது என முடிவெடுத்து கைலாசத்திற்கு போய்விட்டான், என்றுதான் நான் நினைத்து கொண்டேன். மனித ஜன்மத்தை விட அவனுக்கு ரோசம் அதிகமாகவே இருந்திருக்கிறது என்றும் நினைப்பேன்.
Leave A Comment