ஒரு முறை நான் ஷாப்பிங் போய்விட்டு திரும்பி வரும் சமயம் கூட்டமேயில்லாத பஸ்ஸில் என்னுடைய பர்ஸ் தானாகவே  விழுந்து விட்டதா இல்லை யாராவது என் தோள்பையிலிருந்து பர்ஸை எடுத்துவிட்டார்களா எனத்தெரியாது , என் பர்ஸ் காணாமல் போய்விட்டது. நானும் வீட்டிற்கு வந்து உடனே பார்க்கவும் இல்லை. நான் வீட்டிற்கு வந்தவுடன் பையை வைத்துவிட்டு பள்ளியிலிருந்து திரும்பவிருக்கும் பிள்ளைகளுக்காக தின்பண்டங்கள் தயார் செய்துவிட்டு , இரவு சாப்பாட்டிற்கு தயார் செய்து கொண்டிருந்த டயம் ஒரு போன்கால் வந்தது. எனக்கு பிள்ளைகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்ததால் போன் நான்கு முறைகள் அடித்து  ஓய்ந்தது. அன்றைய நாட்களில், செல்போன் அத்தனை பிரபலப்படவில்லை. என்னிடம் செல்போன் இருந்திருக்கவுமில்லை.  டிபன், வம்புபேச்சுக்கள் எல்லாம் முடிந்தபிற்பாடு, இரவில் போன்அடித்தவுடன் பக்கத்திலேயே அமர்ந்திருந்த நானே போனை எடுத்தவுடன், உங்கள் பர்ஸ் எங்கே தொலைத்துவிட்டீர்கள்? என ஒரு ஆண் குரல் கேட்டதும், எனக்கு என் பணப்பை தொலைந்ததே தெரியாமல் இருந்ததால், அப்படியா, நீங்கள் யார், உங்களுக்கு எப்படி தெரியவந்தது, நீங்கள் யார் என என் கேள்விக்கு பதில் கேள்வி வந்ததும் , எங்கள் வீட்டு நம்பரில் வந்த அழைப்பு எனக்கு எச்சரிக்கை விடுப்பது போல் இருந்தபடியால், எனக்கு கை,கால்கள் உதற ஆரம்பித்ததுதான், மிச்சம்.  உங்கள் பைக்குள் யாருக்காகவோ மந்திரித்த குங்குமம், விபூதி வைத்திருந்தீர்கள், உங்கள் பை என் வீட்டிற்குள் வந்த நான்கு மணிநேரத்திற்குள், எங்களுக்கு மிகவும் மனகிலேசம் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் உங்கள் பையை , இந்த பையினுள் இருந்த அட்ரஸ் இருந்த இடத்தில்  வைத்து  விடுகிறேன். என் மீது எதுவும் ஏவி விட்டு விடாதீர்கள் என கூறி, என் பதிலை கூட எதிர்பாராமல் போனை வைத்து விட்டார்.  எங்கள் வீட்டுவாசலில் நிறைய பூத்தொட்டிகள் இருந்தமையால், அன்றே பூத்தொட்டி ஒன்றின் நடுவில் வைத்திருந்ததை நானும் பார்த்து விட்டேன், ஆனால் மறுநாள் காலை வேலைக்கு வரும் ஆயா வரும்வரை காத்திருந்து எடுத்து பார்த்ததில் எல்லாமே அப்படியே இருந்தது. திருடர்களுக்கு கூட மந்திரம் தந்திரங்களில் நம்பிக்கையுள்ளது என்றும், திருட வருபவர்கள் கூட நம்மைப்போலவே உத்யோகத்திற்கு கிளம்பும்  முன், சாமியை கும்பிட்டு விட்டுத்தான் புறப்படுவார்கள் போலிருக்கிறது எனவும் நினைத்துக்கொண்டேன் .